Last Updated : 01 Dec, 2020 02:51 PM

 

Published : 01 Dec 2020 02:51 PM
Last Updated : 01 Dec 2020 02:51 PM

புதுச்சேரி, காரைக்காலில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: நிவர் புயல் பாதிப்புக்கு நிவாரணம் தராவிட்டால் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

நிவர் புயலால் புதுச்சேரியில் சேதமடைந்த படகுகள்.

புதுச்சேரி

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கரையைக் கடந்த நிவர் புயல் பாதிப்புக்கு நிவாரணம் தராவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று (டிச. 01) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும், அதற்குப் புரவி என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் பெயர் சூட்டியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் விசைப் படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிவர் புயலுக்கு நிவாரணம் - மீனவர்கள் வலியுறுத்தல்

ஏற்கெனவே கடந்த நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் மீனவர்கள் கடந்த 20-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், புயல் பாதுகாப்பு காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூவரது படகுகள் முழுமையாகச் சேதம் அடைந்தன. இதுமட்டுமல்லாமல் பல படகுகள் பாதி அளவில் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், விசைப்படகு உரிமையாளர் சங்கக் கூட்டம் தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் இன்று (டிச. 01) நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகக் கூறுகையில், "புயல் பாதிப்பு காரணமாக கடந்த 11 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதற்கான நிவாரணத்தை மத்திய - மாநில அரசுகள் வழங்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அரசு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x