Last Updated : 01 Dec, 2020 01:09 PM

 

Published : 01 Dec 2020 01:09 PM
Last Updated : 01 Dec 2020 01:09 PM

நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை: தமிழ்நாடு வெதர்மேனின் முழுமையான அலசல்

படம் உதவி : பிரதீப்ஜான் ஃபேஸ்புக்

சென்னை

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாற வாய்ப்புள்ளது.

இது புயலாக மாறினால், புரவி என மாலத்தீவு வழங்கிய பெயர் சூட்டப்படும். இந்த புரவிப் புயல் தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி வந்து கன்னியாகுமரி கடல்பகுதி வழியாக அரபிக்கடல் நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்கள் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் “இந்து தமிழ்திசை” இணையதளப் பிரிவுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழையில் இதுவரை வடக்கு, வட உள்மாவட்டங்களான திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் நல்ல மழை கிடைத்துள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது.

மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை திருப்பூரில் மட்டுமே நல்ல மழை கிடைத்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் இன்னும் போதுமான மழை கிடைக்கவில்லை. டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென்மாவட்டங்களுக்கு இனிவரும் நாட்களில் நல்ல மழை தேவை.

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மூலம் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மழை பற்றாக்குறையைப் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா, தமிழகத்தின் நிலப்பகுதிக்குள் கடக்குமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மண்டலமாக மாறி, புயலாக மாறக்கூடும். ஆனால், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி மிக மெதுவாக நகரும் என்பதால், தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்கள் அதாவது டிசம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை கனமழை கிடைக்கும்.

ஆனால், தென்மாவட்டங்களில் நிலப்பகுதிக்குள் இந்தப் புயல் கடக்குமா என இப்போது கூற முடியாது. புயலின் நகர்வைப் பொறுத்துதான் தெரியவரும்.

மன்னார் வளைகுடா பகுதி வழியாக, கன்னியாகுமரி கடல் பகுதிக்குச் சென்று அரபிக்கடல் பகுதிக்குள் செல்லவே பெரும்பாலும் வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தெற்கு கேரளா பகுதி வழியாக புயல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் துல்லியமாகக் கூறலாம்.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்?

தென் மாவட்டங்கலில் மிக மிக கனமழை இருக்கும். டிசம்பர் 2-ம் தேதி காலையில் கடலோர மாவட்டங்களில் மழை முதலில் தொடங்கி படிப்படியாக மழை மற்ற மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும்.

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 4 நாட்களுக்குப் பெய்யக்கூடும். குன்னூர், கொடைக்கானல், பாபநாசம், மாஞ்சோலை போன்ற இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும்.

உள்மாவட்டங்களில் மழை பெய்யுமா?

நிச்சயமாகப் பெய்யக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று கன்னியாகுமரி கடல்பகுதி வழியாக, அரபிக் கடல் பகுதிக்குள் செல்லும்போது, கிழக்கிலிருந்து மேகக்கூட்டங்களை இழுக்கும். அப்போது, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட உள்மாவட்டங்கலில் நல்ல மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் டிசம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புண்டு.

சென்னையில் மழை பெய்யுமா?

வடதமிழக மாவட்டங்கள், கேடிசி எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மன்னார் பகுதியியிலிருந்து கன்னியாகுமரி கடல்பகுதி வழியாக, அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும்போது, காற்றின் இழுப்பு காரணமாக மழை பெய்யக்கூடும். ஆனால், சென்னையில் பரவலாக, கனமழை பெய்ய வாய்ப்பில்லை.

மற்ற மாவட்டங்களில் குறைந்தபட்சம் அடுத்த 4 நாட்கள், அல்லது 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் அடுத்த 4 நாட்களும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும்.

புயலாக மாறினால் காற்றின் வேகம் எவ்வளவு இருக்கும்?

பொதுவாக இலங்கை வழியாக வரும் புயல்கள் வலுவடைந்து வருவது என்பது மிகவும் அரிது. ஆதலால், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிப் புயலாக மாறினாலும், வலுவில்லாததாகவே இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

கஜா, வர்தா, தானே புயலில் காற்றின் வேகம் இருந்ததைப் போன்று இந்தப் புயல் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை காற்று வீசவே வாய்ப்பு உண்டு. அதிலும் இந்தத் தாழ்வு மண்டலம் மெதுவாக நகரும்பட்சத்தில் தென் மாவட்டங்களில் டிசம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை இருக்கக்கூடும். டெல்டா முதல் புதுக்கோட்டை மாவட்டம்வரை மிதமான காற்று வீசக்கூடும்.

மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள ரப்பர் மரங்களை இந்தக் காற்றிலிருந்து பாதுகாப்பது அவசியம்.

கோப்புப்படம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன, கடலுக்குள் எப்போது செல்லலாம்?

மீனவர்கள் இன்று (டிசம்பர் 1-ம் தேதி) முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதாவது 6-ம் தேதிவரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால், மீனவர்கள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல், லட்சத்தீவு, கேரளக் கடற்கரை அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

கேரளாவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?

கன்னியாகுமரி கடற்பகுதி வழியாக அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகரும்போது, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, தெற்கு கேரளா ஆகியவற்றில் மிக கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யக்கூடும். திருவனந்தபுரத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில்கூட காற்று வீசக்கூடும்.

இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x