Published : 01 Dec 2020 10:34 AM
Last Updated : 01 Dec 2020 10:34 AM

பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்துவதா? - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்துவதா என, மத்திய, மாநில அரசுகளுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (டிச. 1) வெளியிட்ட அறிக்கை:

"ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக வஞ்சகம் இழைத்து வருகிறது. அதன் ஒரு கூறாக பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை முற்றாக ஒழித்துக் கட்டும் வகையில் செயல்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்குப் பின்னர் கல்லூரிகளில் சேர்ந்து மேல் படிப்பு தொடர்வதற்காக, அம்பேத்கர் வேண்டுகோளின்படி 1946 இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

நாடு விடுதலை அடைந்த பின்னர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை என்பது சிறுபான்மை இன மாணவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நீடிக்கப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதற்கு வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வந்தது.

மத்திய - மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நிதியைப் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால், தமிழக அரசும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையைக் குறைத்தது.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூ.6,000 கோடி, 2019 இல் இத்தொகை பாதியாகக் குறைக்கப்பட்டு, 3,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மத்திய அரசு நிதி வழங்காததால், 14 மாநில அரசுகள் இத்திட்டத்தை அடியோடு நிறுத்திவிட்டன.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை முற்றாக ரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது.

இதனால் நாடு முழுவதும் 60 லட்சம் பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மாணவர்கள் பள்ளிப் படிப்புக்குப் பின்னர், மேல் படிப்புக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதற்கு பாஜக அரசு மேற்கொண்டுள்ள முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகள் உரிய தொகையை ஒதுக்கீடு செய்து, இத்திட்டம் தொடர்ந்து செயல்பட ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x