Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM
வாய்க்கால்கள் தூர்வாரப் படாத தால் ஊசுடு, பாகூர் ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. அத்துடன் இந்த ஏரிகளில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளதால் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த விவசாயிகள் கோருகின்றனர்.
ஆண்டு முழுவதும் பெருக் கெடுக்கும் ஜீவநதிகளோ, அணைக்கட்டுகளோ புதுச்சேரியில் இல்லை. ஆனாலும் இதுவரை தண்ணீர் பிரச்சினை ஏற்படாதற்கு முக்கியக் காரணம், கடைமடை பகுதியான புதுச்சேரியில் 84 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்திருப்பது தான்.
பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான ஏரிகள் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் புதுச்சேரியில் விவசாய நிலங்களும் கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 1970-ல் 48,842 ஹெக்டேர் விளைநிங்கள் இருந்தன. 2000-ம் ஆண்டில் 24,329 ஆக குறைந்தது. 2009-ல் 17,469 ஹெக்டேரில் இருந்து தற்போது 15 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் ‘நிவர் ’புயலால் 30 செ.மீ மழைபொழிவு இருந்ததால் பல ஏரிகள் நிரம்பத் தொடங்கின. ஆனால் நீர்பாசன வாய்க்கால்கள் தூர்வாராதது, ஆகாயத்தாமரைகள் அகற்றாததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
புதுச்சேரியின் முக்கிய ஏரியான ஊசுடு ஏரியின் நிலை தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், “ஊசுடு ஏரிக்கு வரும் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. ஏரி உட்புறம் முட்புதர், செடி கொடிகள் நிரம்பியுள்ளன. தண்ணீர் வரும் பகுதிகள் அடைபட்டுள்ளது. இருக்கும் தண்ணீரும் பாதுகாக்கப்படவில்லை. ஏனெனில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளது. இருக்கும் நீர் வீணாகும் நிலையை தடுக்க வேண்டும்.
நகருக்கு அருகே ஊசுடு ஏரி உள்ளது. அதை கவனத்தில் கொண்டு சரிசெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
மக்களுக்கும் பலன் தரும்” என்றனர். புதுச்சேரி நெற்களஞ்சியமான பாகூர் ஏரியின் நிலை தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், “பாகூர் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தூர் வாரவேண்டும்.
மழையால் தான் தண்ணீர் சேர்ந்துள்ளது. ஆகாயத்தாமரை தற்போது ஏரியெங்கும் நிறைந்துள்ளது. அது நீரை உறிஞ்சிவிடும். போர்க்கால முறையில்அகற்ற வேண்டும்” என்று குறிப்பிடு கின்றனர்.
காணாமல் போன வரத்து வாய்க்கால்கள்
புதுச்சேரியில் மட்டும் 127.5 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்களை நீர்பாசனக் கோட்டம் பராமரிக்கிறது. இதைத்தவிர செஞ்சி ஆறு, பெண்ணையாறு, குடுவையாறு, பம்பையாறு, மலட்டாறு என 82 கி.மீ நீளமுள்ள ஆற்றங்கரைகளும் நீர்ப்பாசன கோட்டப் பராமரிப்பில் உள்ளன.
புதுச்சேரியானது தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் விழுப்புரம், கடலூர் பகுதிகளில் பெருக்கெடுத்து வரும் மழை நீர் ஏரி, குளங்களுக்கு சென்றுதேங்கும் வகையில் நீர்வரத்துவாய்க்கால்களும் உருவாக்கப்பட்டு இருந்தன. வாய்க்கால்களில் செல்லும் தண்ணீர் ஏரியில் நிரம்பும். ஏரி நிரம்பிவிட்டால் நீர் வழிந்து குளம், நீர்பிடிப்பு பகுதி போன்றவற்றுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குளம் போன்றவை நிரம்பினால் பக்கத்தில் உள்ள மற்றொரு ஏரியில் நிரம்பி, அருகில் உள்ள ஆறுகளின் வழியாக கடலுக்கு செல்வதுபோல சங்கிலித் தொடராக பாசன அமைப்புகளை முன்னோர் ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போது இந்த பாசன வாய்க்கால்கள் இருந்த சுவடுகள் தெரியாமல் மாயமாகி வருகின்றன.
வாய்க்கால்களின் தற்போதைய நிலை தொடர்பாக விவசாய சங்கங்களிடம் விசாரித்தபோது, “பாகூர் சித்தேரி வாய்க்கால், பங்காரு வாய்க்கால், மணமேடு, கடுவனூரில் இருந்து வரும் ஊரல் குட்டை வாய்க்கால், ஊசுட்டேரி ஏரி வாய்க்கால், தொண்டமானத்தம் ஏரி வாய்க்கால், கூனிச்சம்மேடு பழைய, புதிய வாய்க்கால்கள், திருக்கனூர், மங்களம், கோர்காடு, நெட்டப்பாக்கம், வாதானூர் ஆற்று வாய்க்கால்கள் இவை நீர்வரத்திற்கு வித்திட்டவையாக விளங்கின. ஆனால், இவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே கண்ணுக்கு தென்படுகிறது.
தூர்வாராததால் அவைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கின்றன.
பல இடங்களில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 2010-11-ம் ஆண்டின் அரசு புள்ளி விவரங்களின்படி 4,558 வாய்க்கால்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. தற்போது கேள்விக்குறிதான்” என்று குறிப்பிடுகின்றனர்.
புதுச்சேரியில் முக்கிய ஏரிகள் தூர்வாரப்படாத சூழலில் ‘நிவர் ’புயலில் பெய்த மழைநீர் ஏரி, குளங்களுக்கு முழுமையாக சென்றயடையாமல் கடலை அடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT