Published : 30 Oct 2015 02:42 PM
Last Updated : 30 Oct 2015 02:42 PM

20 ஆண்டுகளாக முகத்தில் இருந்த பெரிய கட்டி அகற்றம்: மதுரை அரசு மருத்துவக் குழு சாதனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மூளை, கழுத்து, தொண்டை, மூக்கு பகுதி வரை முகத்தின் ஒரு பகுதியில் பரவியிருந்த 3/4 கிலோ கட்டியை ஒரே நேரத்தில் 4 துறைகளின் மருத்துவ நிபுணர்கள் சேர்ந்து 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.

மதுரை மாவட்டம், கப்பலூரை சேர்நதவர் பவுன்ராஜ் (40). 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது முகத்தின் ஒரு பகுதியில் வெளியே சிறிதாக தெரியும்படி கட்டி இருந்துள்ளது. அந்த கட்டியால் எந்த தொந்தரவும் இல்லாததால் பவுன்ராஜ் கண்டுகொள்ளவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன் திடீரென்று மூக்கு அடைப்பு அதிகமாகி மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார். உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் டாக்டர் சண்முகநாதன், தங்கராஜ் ஆகியோர் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் வெளியே சிறிதாக இருந்த அந்த கட்டி மூளையின் அடிப்பகுதியில் தொடங்கி தொண்டை, கழுத்து, மூக்கு வழியாக முகத்தின் ஒரு பகுதி வரை உள்ளுக்குள் பெரிதாக பரவியிருந்தது தெரிய வந்தது. இந்த கட்டி புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.

அதனால், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் சுந்தரம் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் இந்த கட்டியை ஆய்வு செய்தனர். இதில் இது புற்றுநோய் கட்டி இல்லை என்பதும், ஆரம்பத்தில் மூளையின் நரம்பில் இருந்து வளர்ந்த இந்த கட்டி அங்கிருந்து மூளையின் அடிப்பகுதியில் உள்ள துவாரங்கள் வழியாக மூக்கு, தொண்டை பகுதியை அடைந்து மேலும் பெரிதாகி கழுத்துப் பகுதிவரை வளர்ந்திருப்பதையும் கண்டனர். மூளை, தொண்டை, கழுத்து, மூக்கு வரை தொடர்ச்சியாக இந்த கட்டி அமைந்துள்ளதால் இந்த கட்டியை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நோயாளி உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் கட்டியை அகற்றுவது குறித்து மருத்துவமனை டீன் ரேவதி தலைமையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தரம், மயக்கவியல் நிபுணர் கணேசன், காது, மூக்கு தொண்டை நிபுணர் சண்முகநாதன், மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் முத்துக்குமார், ஸ்ரீசரவணன், முத்துக்குமார், ரகு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரே நேரத்தில் இந்த 4 மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் சேர்ந்து இந்த கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, ஆக. 6-ம் தேதி தொடர்ந்து 10 மணி நேரம் பவுன்ராஜுக்கு அறுவைசிகிச்சை செய்து, அவரது உயிருக்கு ஆபத்தில்லாமல் 3/4 கிலோ கட்டியை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர். கட்டியை அகற்றி நோயாளி உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவை டீன் ரேவதி பாராட்டினார்.

மருத்துவ உலகில் அபூர்வமான கட்டி

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை உதவி மருத்துவ நிபுணர் ரகு கூறியது: அறுவை சிகிச்சையின்போது தொண்டையில் ஏற்பட்டிருந்த கட்டி பெரிதாக இருந்ததால் தாடை எலும்புகளை இரண்டாகப் பிளந்து கட்டி அகற்றப்பட்டது. கழுத்தில் இருந்த கட்டியை அகற்றும்போது அதனைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களும், நரம்புகளும் பாதுகாக்கப்பட்டன. அதேபோல் மூளையின் அடிப்பகுதியில் இருந்த கட்டியை அகற்றும்போது கபால எலும்பு அகற்றப்பட்டது. கட்டியை எடுத்தபின் மீண்டும் கபால எலும்பு அதே இடத்தில் பொருத்தப்பட்டது. அறுவைசிகிச்சையின் முடிவில் பவுன்ராஜ் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இரு வாரங்கள் இருந்தார். தற்போது அந்த கட்டியின் தொந்தரவுகளில் இருந்து முழுமையாக மீண்டு எல்லோரையும் போல் பேசுகிறார். காது, மூக்கு, தொண்டை, கழுத்துப் பகுதியில் எந்த தொந்தரவும் அவருக்கு இல்லை. இந்த கட்டியை அகற்றாமல் இருந்தால் மூச்சு அடைத்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இவருக்கு இருந்த கட்டி, தொண்டை, மூளை, கழுத்து, மூக்கு வரை பரவியிருந்ததால் மருத்துவ உலகில் இந்த கட்டி மிகவும் அபூர்வமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x