Published : 30 Nov 2020 08:46 PM
Last Updated : 30 Nov 2020 08:46 PM

போராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை 

சென்னை

ஒரு இடத்தில் சங்கம் வருகிறது என்றால் அங்குள்ள சூழ்நிலைக் கொடுமையின் கட்டாயம் அது என்பதை உணரவேண்டும். தொழிலாளர்களோ, மருத்துவர்களோ, காவல்துறையோ யாரானாலும் மனிதனாக மதிக்கப்பட்டால், மனிதத்தன்மையோடு நடத்தப்பட்டால், அவர்கள் தரப்பு நியாயம் ஏற்கப்பட்டால் போராட்டங்கள் வராது என சிஐடியூ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சவுந்ததரராசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடை செய்யுமாறு யூனுஸ்ராஜா என்பவர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் போக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளார்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் போன்றோருக்கு சங்கம் தேவையில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

நீதிபதிகளின் இந்தக் கருத்து வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. சங்கம் இருந்தாலே வேலை நிறுத்தம் நடக்கும் என்ற அனுமானத்தில் இருந்து சில பிரிவினருக்குச் சங்கமே தேவையில்லை என்ற முடிவு எட்டப்படுகிறது. சங்கம் இருக்கிற துறைகளில் அல்லது ஆலைகளில் நினைத்தபோதெல்லாம் பொழுதுபோக்காக யாரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை.

மெய் வருத்தியும், மூளையைக் கசக்கியும் வேலை செய்வோருக்கு அந்த வேலையின் பலனை அனுபவிக்கும் முதலாளிகள் அல்லது நிர்வாகத்தினர் குறைந்தபட்ச நியாயத்தைச் செய்ய மறுக்கும்போது, சட்டப்படியாக கூட நடக்காதபோது, இழிவாகவும், மனிதத்தன்மையற்றும் நடத்தும்போது, அற்ப காரணத்திற்கெல்லாம் ஆணவத்தோடு தண்டிக்கும்போதும் வேலை செய்வோருக்கு போராட்டம்தானே ஒரேவழி? வேலையின் பலனைச் சுரண்டிக் குவித்து ஆனந்தம் கொள்வோருக்கு அந்தப் பலன் நிற்கும்போது மட்டும்தான் வலிக்கிறது.

நவீன தொழில் நிறுவனங்கள் தோன்றிய கடந்த 300 ஆண்டுகளாக நடந்த எண்ணற்ற போராட்டங்களால் பிறந்த உரிமைதான் தொழிற்சங்க உரிமை. தொழிற்சங்க உரிமை யாரும் போட்ட பிச்சையல்ல. உற்பத்தி சுமுகமாக நடக்கவே தொழிலாளர்கள் கூட்டாகவும், அமைப்பாகவும், இயங்க அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிகளும் அரசும் உணர்ந்து ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் தொழிற்சங்கச் சட்டமாகும். பழிவாங்கலுக்கு அஞ்சி யாரும் எடுத்த எடுப்பில் சங்கம் அமைப்பதில்லை.

இப்போதும் எண்ணற்ற தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் சங்கம் இல்லை. நமது சுதந்திரத்தின் லட்சணம் அப்படி. ஒரு இடத்தில் சங்கம் வருகிறது என்றால் அங்குள்ள சூழ்நிலைக் கொடுமையின் கட்டாயம் அது என்பதை உணரவேண்டும். தொழிலாளர்களோ, மருத்துவர்களோ, காவல்துறையோ யாரானாலும் மனிதனாக மதிக்கப்பட்டால், மனிதத்தன்மையோடு நடத்தப்பட்டால், அவர்கள் தரப்பு நியாயம் ஏற்கப்பட்டால் போராட்டங்கள் வராது.

போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடக்கின்றன என்றால் அதனை நடத்துபவர்களை மட்டும் குற்றக் கண்கொண்டு பார்க்காமல் அதன் மறுபக்கத்தையும் அக்கறையோடு கவனிக்க வேண்டும். மக்களின் திடீர் போராட்டங்கள் அன்றாடம் வெடிக்கின்றன. அங்கெல்லாம் சங்கமே இல்லை. எனினும் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன என்று மனம் கொண்டு யோசிக்கவேண்டும்.

ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் தவறு என்று கூட்டாகத் தெருவிற்கு வந்து மக்களுக்கு அறைகூவல் விடுத்ததின் பொருள் என்ன? அந்தப் போராட்டத்திற்கு அவர்களுக்கு என்ன சங்கமா இருந்தது? ஆனாலும், அவர்கள் அநீதியை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

கோயில் அர்ச்சகர்கள் கூட சங்கம் அமைத்துப் போராடும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள். வேலை நிறுத்தங்களுக்கு இப்போதும் சட்டத்தில் வரையறைகள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருக்கின்றன. வேலை நிறுத்தங்கள் விளையாட்டுமல்ல, சட்டப்படி கேள்வி வரைமுறைக்கு அப்பாற்பட்டதுமல்ல. வேலை நிறுத்தம் சட்டப்படி சரியா தவறா என்பதை அரசு தீர்மானிக்கவேண்டும். அரசு அப்படி எடுக்கும் முடிவு குறித்து சட்டப்படி நீதிமன்றம் பரிசீலிக்கலாம்.

அரசின் வேலையை, தொழிலாளர் துறையின் வேலையை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளக் கூடாது. பல வேலை நிறுத்தங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது பிரச்சினையைத் தீவிரப்படுத்தவே செய்கிறது. அரச கட்டளை என்பதைப்போல நீதிமன்றக் கட்டளை என்று வேலை நிறுத்தத்தை முடக்குவதால் சரியான நீடித்த தீர்வு கிடைக்காது. இதில் சமூகப் பொறுப்போடும், கரிசனத்தோடும் அரசும் நிறுவனத்தாரும் நடந்தால்தான் இருதரப்பிலும் புரிந்துணர்வும், அமைதியும் ஏற்படும்.

எனவே, சங்கம் அமைக்கும் உரிமை எல்லோருக்கும் வேண்டும். அந்தந்தத் துறையினர் தத்தம்குறைகளைக் கூட்டாக முறையீடு செய்து தீர்வினை எட்டும் உரிமை உறுதிப்படவேண்டும். நீதிபதிகள் சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராகவே கருத்துத் தெரிவிப்பது ஏற்கதக்கதல்ல. வருந்தத்தக்கது”.

இவ்வாறு சௌந்தரராசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x