Published : 30 Nov 2020 06:53 PM
Last Updated : 30 Nov 2020 06:53 PM
சிவகங்கைக்கு முதல்வர் பழனிசாமி வருவதையொட்டி மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 4-வது முறையாக தள்ளிபோக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் உள்ளன.
இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் பெரும்பான்மையை காரணம் காட்டி ஒரு தேர்தலை மூன்று முறை மட்டுமே தள்ளி வைக்க முடியும். நான்காவது முறையாக பெரும்பான்மைக்கு குறைவான கவுன்சிலர்கள் வந்தாலும், அவர்கள் மூலம் தேர்தல் நடத்த வேண்டும். அதில் பெரும்பான்மை வாக்கு பெறுவோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
போட்டியிடுவோர் சம வாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்நிலையில் கரோனாவால் 6 மாதங்களாக தேர்தல் அறிவிக்கவில்லை.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து 8 மாதங்களாகியும், சிவகங்கை மாவட்டத் தலைவர், துணைத் தலைவர் தேர்வாகாததால், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் செயல்பட முடியாதநிலை உள்ளது.
அதிருப்தி அடைந்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இருவாரத்திற்குள் தேர்தலை நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் டிச.4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டிச.4-ம் தேதி பகல் 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி சிவகங்கை வருகிறார். மேலும் அதிகாரிகளுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.
மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் உள்ளார். முதல்வர் வருவதால் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால் 4-வது முறையாக மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT