Published : 30 Nov 2020 05:16 PM
Last Updated : 30 Nov 2020 05:16 PM
தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதிப்பற்றாக்குறை உள்ளதாக நான்கு மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் ஒன்றை தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அதில் “தமிழகத்தில் தர்மபுரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 151 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டது.
அரியலூர், கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொறுத்தவரை மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்படி எல்காட் நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய இடங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பொருத்தவரை விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
நாமக்கல், திருப்பூர், நீலகிரி திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியத்தில் நிதி பற்றாக்குறையாக இருப்பதால் இரண்டு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று தலைமைச் செயலாளர் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பொருத்தவரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை விரைந்து செய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விரைந்து அடையாளம் காண வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியத்தில் நிதிப்பற்றாக்குறை இருப்பதாக நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அப்பகுதிகளில் வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தியோ அல்லது உபரி நிதி உள்ள மாவட்டங்களில் இருந்து நிதியை பெற்றோ கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT