Published : 30 Nov 2020 04:48 PM
Last Updated : 30 Nov 2020 04:48 PM
சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (நவ. 30) முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:
"தமிழக அரசு சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாகத்தையும் 2013 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்த ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் இணைந்தே கையகப்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத சூழ்நிலையில், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக அறிவிக்க வேண்டுமெனவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சிகிச்சையளித்திட இதனை உயர் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றிட வேண்டுமெனவும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளோம்.
இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இம்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என அறிவித்ததுடன் இதற்கான தொடக்க விழாவினை கடந்த 7.4.2020 அன்று தமிழக முதல்வர் காணொலி மூலம் நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத வண்ணம் கரோனா நோய்த் தொற்று காரணமாக இவ்விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால், அரசு ஆவணங்களில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்றே பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என அறிவிக்கப்பட்ட பின்னரும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் தீர்மானிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணங்களே இந்தாண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் தீர்மானிக்கப்படும் ரூ. 5.40 லட்சம் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களின் பெற்றோர்களும் பெரும் வேதனையிலும் மூழ்கியுள்ளனர்.
உயர்கல்வித்துறையின் கீழ் இம்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நீடிப்பதன் விளைவாகவே இவ்வாறு கட்டணம் தீர்மானிப்பதாக விளக்கமளிக்கப்படுகிறது. மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி என அறிவிக்கப்பட்ட பின் இவைகளை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பதே பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலமே இம்மருத்துவமனை சிறந்த மருத்துவ சேவையை இப்பகுதி மக்களுக்கு வழங்கவும், கடலூர் மாவட்ட மருத்துவமனையாக அரசு அறிவித்த நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும். மேலும், பயிலும் ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கவும் முடியும். உயர்கல்வித்துறையிலிருந்து மருத்துவ துறைக்கு இக்கல்லூரியை மாற்றுவது அரசின் முடிவின் அடிப்படையில் எளிதானதாகும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
எனவே, சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை (கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை) எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இங்கு பயிலும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை தீர்மானித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT