Published : 30 Nov 2020 12:54 PM
Last Updated : 30 Nov 2020 12:54 PM
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், திருச்சியில் இன்று காகித ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் முன் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (நவ.30) போராட்டம் நடைபெற்றது. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்குத் தடை விதிக்க வேண்டும், விவசாயிகளை இழிவுபடுத்தி சமூக வலைதளங்களில் செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட காகித துண்டுப் பிரசுரங்களை ராக்கெட் போல் மடக்கி, கைகளில் வைத்திருந்த விவசாயிகள் ஒரு சேர அனைத்தையும் வீசினர்.
இது தொடர்பாக பி.அய்யாக்கண்ணு கூறும்போது, "டெல்லிக்குச் சென்று போராட இருந்த எங்களைப் புறப்படவிடாமல் காவல் துறையினர் தடுத்துவிட்டனர். எனவே, ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களுக்குப் பதில் வரும் வரை இங்கேயே போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
இந்தப் போராட்டத்தில் 8 பெண்கள் உட்பட விவசாயிகள் 150 பேர் பங்கேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT