Published : 30 Nov 2020 03:12 AM
Last Updated : 30 Nov 2020 03:12 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஓரிரு நாளில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று காலையில் 95.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 282 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 45 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இந்த அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 80.20 அடியாக இருந்தது.
2018-ம் ஆண்டில் நீர்மட்டம் 102.40 அடியாக இருந்தது. அடுத்த வாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நிரம்பும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் பெருங்கால் மற்றும் பிரதான கால்வாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 126.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,101 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 127.30 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 19 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 34.50 அடியாகவும் இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம்- 20 மி.மீ., சேர்வலாறு- 35 மி.மீ, மணிமுத்தாறு- 22 மி.மீ., அம்பாசமுத்திரம்- 5 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில் மலையோர பகுதிகள் மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 62 மிமீ. மழை பதிவாகியிருந்தது. அடையாமடையில் 14 மிமீ., முக்கடல் அணையில் 12, கன்னிமாரில் 48, பூதப்பாண்டியில் 10, பாலமோரில் 9 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. இரவு நேரத்தில் பனி மூட்டத்துக்கு மத்தியில் கொட்டிய சாரல் மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவியது. மலையோரங்களில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.08 அடியாகவும், பெருஞ்சாணி நீர்மட்டம் 70.25 அடியாகவும் உள்ளது.
அடவிநயினார் அணையில் 45 மிமீ மழை
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டில் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், ஏராளமான குளங்கள் நிரம்பாமல் உள்ளன.
இந்நிலையில், நேற்றுமுன் தினம் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணைப் பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 20 மி.மீ., கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 5 மி.மீ., குண்டாறு அணையில் 3 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அடவிநயினார் அணை தவிர மற்ற அனைத்து அணைகளும் நிரம்பின. இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 81.70 அடியாக இருந்தது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாக இருந்தது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.26 அடியாக இருந்தது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.25 அடியாக இருந்தது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக டிசம்பர் 1 முதல் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT