Published : 29 Nov 2020 08:01 PM
Last Updated : 29 Nov 2020 08:01 PM

தொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்: ராமதாஸ் விமர்சனம் 

சென்னை

ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களில் மிகவும் முக்கியமானது அனைத்து மக்களின் விருப்பங்களையும், உரிமைகளையும் மதித்து அதில் தலையிடாமல் இருப்பதுதான். ஆனால், அதற்கு மாறாக ஊடகங்கள் வழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வது ஜனநாயகத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் செயலாகும். அதை ஏற்க முடியாது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் பொதிகை தொலைக்காட்சி உட்பட அனைத்து மாநிலத் தொலைக்காட்சிகளிலும் தினமும் சமஸ்கிருத செய்திகளையும், வாராந்திர செய்தித் தொகுப்பையும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டலத் தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலைய அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செய்திகள் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

பிரசார்பாரதி நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கோப்பு எண் 8/38/2020 பி1 என்ற எண் கொண்ட 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில் டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதம் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சமஸ்கிருதச் செய்திகளை அனைத்து மாநில மொழி செயற்கைக்கோள் ஒளிபரப்பு அலைவரிசைகளும் அதே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் அல்லது அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒளிபரப்ப வேண்டும் என்று ஆணையிடப் பட்டுள்ளது.

அதேபோல், சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாரந்திர செய்தித் தொகுப்பை அதே நேரத்திலோ, அந்த நாளில் வேறு ஏதேனும் நேரத்திலோ ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது மிகவும் அப்பட்டமான சமஸ்கிருதத் திணிப்பாகும்.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் உள்ளூர் மொழிகளில் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றில் உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவை உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உள்ளன. தேசிய அளவிலான நிகழ்வுகள் ஆங்கிலச் செய்திகளில் விரிவாக வழங்கப்படுகின்றன.

ஆனால், தேசிய அளவிலான சமஸ்கிருத செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் எதுவும் இருக்காது. எனவே, சமஸ்கிருதச் செய்திகளைப் பார்க்க வேண்டிய தேவை மாநில மொழி பேசும் மக்களுக்கு இல்லை. அவ்வாறு இருக்கும்போது, சமஸ்கிருத மொழிச் செய்திகளை ஒளிபரப்பக் கட்டாயப்படுத்துவதுதான் சமஸ்கிருதத் திணிப்பு ஆகும்.

இந்தியாவில் சுமார் 14,000 பேர் மட்டுமே சமஸ்கிருதத்தைப் பேசுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர்களுக்காக அவர்களின் மொழியில் தூர்தர்ஷனின் தேசிய அலைவரிசையில் தினமும் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதுவே தேவைக்கும் அதிகமானது. ஆனால், அதற்கும் கூடுதலாக அனைத்து மாநில மொழி அலைவரிசைகளும் சமஸ்கிருதச் செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பது தேவைகளைச் சார்ந்ததாகத் தெரியவில்லை; மாறாக, சமஸ்கிருதம் பேசாத, அம்மொழிச் செய்திகளைப் பார்க்க விரும்பாத மக்கள் மீது சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். முதலில் தினமும் 15 நிமிடங்களுக்கு சமஸ்கிருதம் பேசாத மக்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்படும்; அடுத்ததாக ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களுக்குத் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படும்.

இது சமஸ்கிருதம் பேசாத மக்கள் மீது நடத்தப்படும் மொழி மற்றும் கலாச்சாரத் தாக்குதல் ஆகும். எதிர்காலத்தில் இந்தியா என்பது ஒற்றை நாடு; அதில் இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே இரட்டை மொழிகள் என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் அனைத்து மொழி பேசும் மக்கள் மீதும், குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் மீது மத்திய அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் நடவடிக்கைகள் அப்பட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் சென்னை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் ஒலிபரப்பாகும் 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகளைத் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.

அதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிடச் செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மணி நேர இந்தி நிகழ்ச்சி திணிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை ரத்து செய்து சமஸ்கிருதச் செய்திகள் திணிக்கப்படுகின்றன.

ஜனநாயகம் என்பது அழகான தத்துவம் ஆகும். அதன் அடிப்படைத் தத்துவங்களில் மிகவும் முக்கியமானது அனைத்து மக்களின் விருப்பங்களையும், உரிமைகளையும் மதித்து அதில் தலையிடாமல் இருப்பதுதான். ஆனால், அதற்கு மாறாக ஊடகங்கள் வழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வது ஜனநாயகத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, பொதிகை உள்ளிட்ட மாநில மொழி தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் சமஸ்கிருதச் செய்திகளைத் திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, மாநில மொழித் தொலைக்காட்சிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தைச் செறிவாக்கவும், செழுமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x