Published : 29 Nov 2020 06:23 PM
Last Updated : 29 Nov 2020 06:23 PM
கோவையில் தந்தையின் சொத்தை ஏமாற்றிப் பறிக்க முயன்ற மகனின் முயற்சியைத் தடுத்தி நிறுத்தி, தந்தைக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்க கோவை தெற்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சின்னியம்பாளையத்தை அடுத்த வெங்கிட்டாபுரத்தில் வசிப்பவர் வெள்ளிங்கிரி (75). இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வெள்ளிங்கிரி தனக்குச் சொந்தமான ஒன்றைரை ஏக்கர் நிலத்தை கடந்த 2008-ம் ஆண்டு மூவருக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 15 சென்ட் பூமியை தனது பராமரிப்பிற்காக வைத்திருந்தார்.
இந்நிலையில் மூத்த மகன் செல்வராஜ், அவரது தந்தைக்குச் சொந்தமான 15 சென்ட் நிலத்தை, தனக்குத் தெரியாமல் விற்க முடியாதவாறு மறைமுகமாக கையெழுத்து பெற்று பதிவு செய்துள்ளார். பின்னர், வெள்ளிங்கிரியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் அவர் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.
சொத்தை எழுதி வைக்கும்போது மாதந்தோறும் வெள்ளியங்கிரிக்கு பாரமரிப்புத் தொகையை அளிக்க உறுதியளித்தும் செல்வராஜ் பணம் அளிக்கவில்லை. பராமரிப்புத் தொகையைக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், வங்கியில் வைத்திருந்த தொகையையும் ஏமாற்றிக் கையொப்பம் பெற்று எடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த வெள்ளியங்கிரி, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகுவிடம் சென்று விவரத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார். அதன்படி கோட்டாட்சியர் செ.தனலிங்கத்திடம் விரிவான ஆவணங்களுடன் வெள்ளியங்கிரி புகார் மனு அளித்தார்.
இதையடுத்து இருதரப்பையும் அழைத்து விசாரித்த கோட்டாட்சியர், "வெள்ளிங்கிரிக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை அவரே பயன்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. இதில் செல்வராஜ் பிரச்சனையோ, குறுக்கீடோ செய்யக் கூடாது. மேலும், செல்வராஜ் தனது தந்தையின் பராமரிப்புச் செலவுக்காக மாதந்தோறும் ரூ.4 ஆயிரத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர முன்வர வேண்டும்" என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT