Published : 29 Nov 2020 05:01 PM
Last Updated : 29 Nov 2020 05:01 PM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை மட்டும் ஏன் பேசுகிறீர்கள். அந்தச் சம்பவத்தில் இறந்துபோன மற்ற 15 பேரைப் பற்றி ஏன் பேசுவதில்லை. அவர்கள் தமிழர்கள் இல்லையா? ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ஹீரோ ஆக்காதீர்கள். அவர்கள் ஹீரோக்கள் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரை விடுவிக்க வேண்டும் எனக் கோரி அதிமுக, திமுக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
உச்ச நீதிமன்றம், சிபிஐ ஆகிய அமைப்பும் 7 பேரை விடுவிக்க மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. இவர்கள் 7 பேரையும் விடுவிக்கக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்துவிட்டது. ஆனால், ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் தொலைக்காட்சி நெறியாளர் கேள்வி எழுப்புகையில், “ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இடையே நிலைப்பாடு வேறாக இருக்கிறது. இடைவெளி அதிகமாகி இருக்கிறதா” எனக் கேட்டார்.
அதற்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
''ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ராஜீவ் காந்தியின் கொலையோடு தொடர்புடைய 7 பேரின் பெயர்கள் மட்டும் அனைவருக்கும் தெரிகிறது. இதுதான் தமிழ்நாடு.
இறந்தவர்களின் பெயர்களை நான் சொல்கிறேன். கோகிலா எனும் பெண், வின்சென்ட் என்ற காவல் ஆய்வாளர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முனுசாமி, இளையான்குடியிலிருந்து ஆய்வாளர் இக்பால், ஆய்வாளர் ராஜ் குரு. 15 பேரின் பெயர்கள் தெரியாவிட்டாலும் இவர்களின் பெயர் எனக்குத் தெரிந்திருக்கிறது.
கொலைக் குற்றவாளிகள் 7 பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழகத்தில் தமிழ், தமிழ் எனப் பேசும் கட்சிகள் என்றாவது ஒருநாள் ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து இறந்துபோன 15 பேரின் பெயரைக் கூறியிருக்கின்றவா?
இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா, இவர்களுக்கெல்லாம் நியாயம் கிடையாதா. இவர்களைப் பற்றி என்றாவது அந்தக் கட்சிகள் பேசியிருக்கின்றனவா? ஒருநாள் கூட பேசியதில்லை.
சட்டரீதியாக ஆயுள் தண்டனைக் கைதி குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார்கள் எனச் சட்டத்தில் இடம் இருந்தால் விடுவிக்கட்டும். அதற்கு நான் மறுத்துக் கூறவில்லை. ஆனால், அந்தக் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் ஹீரோவாக ஆக்காதீர்கள். அந்த 7 பேரும் ஹீரோக்கள் அல்ல. இவர்கள் 7 பேரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இவர்களை ஹீரோ ஆக்காதீர்கள்.
ஆனால், இந்த 15 பேரைப் பற்றி ஒருநாளும் பேசவில்லையே. இது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது''.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திரு. ராஜீவ் காந்தி அவர்களுடன் இறந்தவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லையே?
கொலை குற்றவாளிகளை ஹீரோவாக ஆக்காதீர்கள்...
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்களின் @News18TamilNadu பேட்டியிலிருந்து pic.twitter.com/vzH542vJ7Y
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT