Published : 29 Nov 2020 03:50 PM
Last Updated : 29 Nov 2020 03:50 PM
லட்சுமி விலாஸ் வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழக அமைப்பாளர் எச்.ஆதிசேஷன், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஸ்ரீசக்திகாந்த தாஸுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
''சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. டிபிஸ் வங்கியுடன் முழுமையாக இணைப்பதால் லட்சுமி விலாஸ் வங்கி இனிமேல் இருக்காது. லட்சுமி விலாஸ் வங்கியின் கட்டமைப்பு எல்லா வெளிநாட்டு வங்கிகளின் கட்டமைப்புகளைவிடப் பெரியது. வெளிநாட்டு வங்கிகள் தங்களின் கிளைகளை இந்தியாவில் தொடங்க விதிகளைப் பின்பற்றாமல் முறைகேடாகப் பின்வாசல் வழியாக நுழைய முயல்கிறது.
டிபிஎஸ் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியைக் கையகப்படுத்த ரூ.2500 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. இப்பணம் லட்சுமி விலாஸ் வங்கிக்கு நேரடியாக வராமல் டிபிஎஸ் நிறுவனத்திடம் தான் இருக்கும். அதே நேரத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் ரூ.20,000 கோடி வைப்பு நிதி டிபிஎஸ் நிறுவனத்துக்கு நேரடியாகச் செல்கிறது.
லட்சுமி விலாஸ் வங்கி நவ. 20 வரை ரூ.1,600 கோடி அளவுக்குக் கடன் கொடுத்துள்ளது. இதில் ரூ.1,600 கோடி வாராக்கடனாகும். எல்லாக் கடன்களுக்கும் அசையா சொத்துகள், வீடு, கட்டிடங்கள், அசையும் சொத்துகள், தனிப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கும். இதனால் கடனைத் திரும்ப வசூலிப்பதில் சிரமம் இருக்காது.
இந்தியாவில் 1961 முதல் 81 வங்கி இணைப்புகள் நடந்துள்ளன. வங்கி தேசியமயமாக்கலுக்குப் பிறகு 34 தனியார் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரு இந்திய வங்கி கூட வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் வங்கியுடன் இணைக்கப்படவில்லை. லட்சுமி விலாஸ் வங்கியை மட்டும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் புதிய கொள்கையா? என்பது தொடர்பாக விரிவாக விவாதம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இந்த முடிவு பிரதமரின் சுயசார்பு பாரதம் செயல் திட்டத்துக்கு எதிரானது.
சமீபத்தில் எஸ் வங்கி பாதிக்கப்பட்ட போது எஸ்பிஐ , எல்ஐசி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ , கோடக் மற்றும் சில இந்திய நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.12,000 கோடி மறு மூலதனம் செய்யப்பட்டு பிரச்சினை சரி செய்யப்பட்டது . தற்போது எஸ் வங்கி முன்னேற்றத்தில் உள்ளது.
இதேபோன்று லட்சுமி விலாஸ் வங்கிக்குத் தேவையான மூலதனத்தை இந்திய நிறுவனங்களிடம் திரட்டி நல்ல நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, ரிசர்வ் வங்கி தன்னுடைய முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும். லட்சுமி விலாஸ் வங்கியின் சிக்கலுக்கு இந்திய அளவில் தீர்வு கண்டறிய வேண்டும்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT