Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM
ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆண்டார்மடம் கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த 2 நாட்களாக உணவு மற்றும் குடிநீரின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஆரணி ஆற்றின் வழியே பழவேற்காடு ஏரியில் கலந்து பின் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.
இந்நிலையில், கூடப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டார்மடம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பணை பணி இன்னும் நிறைவடையாத சூழ்நிலையில், ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் தடுப்பணையை மீறி ஓடுகிறது.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் சாலையை வெட்டி எடுத்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால், சாலை அடித்துச் செல்லப்பட்டதோடு, கிராமத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அத்துடன், 300 ஏக்கர் பரப்பளவு நெற்பயிரும் நீரில் மூழ்கி பாழாகி உள்ளது. சாலை துண்டிக்கப்பட்டதால் ஆண்டார்மடம் கிராம மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2 நாட்களாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாமலும், குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உடனடியாக மழைநீரை வெளியேற்ற தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT