Last Updated : 28 Nov, 2020 06:38 PM

1  

Published : 28 Nov 2020 06:38 PM
Last Updated : 28 Nov 2020 06:38 PM

மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி  

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும் மானாமதுரை வழியாக மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.

காயமடைந்தவர்களை மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாதது, விபத்து சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாதது போன்ற காரணங்களால் காயமடைந்தவர்களை சிவகங்கை, மதுரைக்கு பரிந்துரை செய்கின்றனர்.

ஏற்கெனவே 14 மருத்துவர்கள் பணிபுரிந்த இம்மருத்துவமனையில், தற்போது 5 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர்.

நோயாளிகளும் நீண்ட நேரம் காத்திருக்கும்நிலை உள்ளது. போதிய சுகாதார பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரக் கேடாக உள்ளது. அடிக்கடி சுத்தம் செய்யாததால் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

இதையடுத்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் கூறுகையில், ‘‘பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே மருத்துவர்கள் வேறு இடங்களுக்கு மாறுதலில் சென்று விடுகின்றனர்.

இதனால் தான் பற்றாக்குறை ஏற்படுகிறது. அங்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். விரைவில் நியமிக்கப்படுவர்,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x