Published : 28 Nov 2020 06:35 PM
Last Updated : 28 Nov 2020 06:35 PM
மத்திய அரசு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சு நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றும், புதிய வேளாண் விரோதச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட அமைப்பின் சார்பில் திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசினுடைய வேளாண் விரோதச் சட்ட நகலை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர்.
போராட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:
"மோடி பொறுப்பேற்றது முதல் மத்திய அரசு, விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு எதிராகவும் பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் என்கிற பெயரில் விவசாயத்தை அழிக்கக்கூடிய திட்டங்களைச் சட்டமாக்கிப் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
கரோனா கொடிய தாக்குதலில் ஒட்டுமொத்த உலகமும் முடங்கி இருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அவசரகாலக் கூட்டத்தில் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் விவாதித்ததாக, ஒத்த கருத்தோடு நிறைவேறியதாகப் பொய்யான தகவலைச் சொல்லி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயத்தை மத்திய அரசு முற்றிலும் கைவிட்டு நெல், கோதுமை கொள்முதல் செய்வதை முற்றிலும் கைவிட முயற்சிக்கிறது.
வேளாண் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு நிதி பெறுகிறோம் என்ற பெயரில் உலகப் பெரு முதலாளிகள் நிதியைப் பெறுவதற்கான அனுமதி வழங்குகிறது. ஆன்லைன் டிரேட் என்கிற பெயரில் உலக வர்த்தகச் சூதாடிகளைச் சட்டம் போட்டு அனுமதிக்கிறது. இந்தச் சட்டம் விவசாயிகளைப் பேரழிவுக்குக் கொண்டு செல்வதோடு வணிகர்களையும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் சட்டமாகும்.
இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டிலும் நெல் கொள்முதல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். எனவே ஒட்டுமொத்த விவசாயத்தை அழிக்கக்கூடிய இந்தச் சட்டத்திற்குத் தமிழக முதல்வர் ஆதரவு அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமின்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக அரசு காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்ததோடு காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து அதனைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்தச் சட்டத்தையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இன்றைக்கு இந்த வேளாண் சட்டம் வழிவகுக்கிறது.
உண்மை நிலை தெரிந்து பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் எதிர்த்து வருவதைப் பின்பற்றி, தமிழக அரசும் இந்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தைச் சட்டப்பேரவையைக் கூட்டி நிறைவேற்றவேண்டும். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்துக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
தேவையானால் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க முன் வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனை மறுக்கும் பட்சத்தில் தமிழக முதல்வருக்கு எதிராகத் தமிழக விவசாயிகள் போராடத் தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன்.
பிரதமர் மோடி போராடுகிற விவசாயிகளை அழைத்துப் பேசி வருகிற 3-ம் தேதி தீர்வு காணுவார், அன்றைய தினம் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம். மறுக்கும் பட்சத்தில் டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் ஒன்றுபட்டு, மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன்".
இவ்வாறு பாண்டியன் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தில் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜி வரதராஜன் துணை செயலாளர் எம்.செந்தில்குமார், மாவட்டத் தலைவர் எம் சுப்பையன் உள்ளிட்ட அனைத்து ஒன்றிச்ய செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT