Published : 28 Nov 2020 06:27 PM
Last Updated : 28 Nov 2020 06:27 PM
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா, துணை வேந்தராக பதவியேற்றதில் இருந்து பல்கலைக்கழகத்தில் செலவீனங்களை குறைத்தல், தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துதல், பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட எதிர்கால சந்ததியினர் பலனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரிடமும் ரூ.13 முதல் ரூ.,15 லட்சம் வரை வசூல் செய்தாகவும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பினார்.
இந்தப்புகார் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் 11.11.2020-ல் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை.
அது தெடார்பாக முதல் கட்ட விசாரணை நடத்தாமலும், துணை வேந்தரிடம் விளக்கம் கேட்காமலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கள் ஏற்பட்டுள்ளது.
சூரப்பாவுக்கு எதிராக புகார் அளித்தவர் புகாரில் போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்துள்ளார். அவர் புகாரில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது. புகார்தாரரின் உண்மை தன்மையை ஆராயமல் விசாரணை குழு அமைத்தது சட்டவிரோதம்.
எனவே, நீதிபதி கலையரசன் குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT