Published : 28 Nov 2020 05:12 PM
Last Updated : 28 Nov 2020 05:12 PM

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக வடிவமைப்பு தவறால் விபத்தில் சிக்கி மீனவர்கள் மரணம்: காணொலியில் நடந்த மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு

நாகர்கோவில்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் வடிவமைப்பில் செய்த தவறுகளால் மீனவர்கள் விபத்தில் சிக்கி தொடர்ந்து மரணமடைந்து வருவதாக மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு விடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டம் கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 8 மாதத்திற்கு பின்பு காணொலி காட்சி மூலம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்கள், மணக்குடி மீன்துறை ஆய்வாளர் அலவலகம், முட்டம் ஜேப்பியார் துறைமுக துணை ஆய்வாளர் அலுவலகம், தூத்தூர் துணை ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் கோரிக்கைகள், குறைகள் குறித்து தெரிவித்தனர்.

கடலில் காணாமல் போன மீனவர்களை இறந்ததாகவே கணக்கில் கொண்டு அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை அரசு உடனடியாக வழங்கவேண்டும். மீனவர்களுக்கு என தனி சட்டப்பேரவை தொகுதியை ஒதுக்கவேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். குமரியில் புற்றுநோய் பாதிப்புகள் மறைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வடிவமைப்பில் செய்த பெரும் தவறுகளால் முகத்துவாரத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்தில் மீனவர்கள் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர்.

இவற்றை சரிசெய்ய காலம் கடத்தாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்ப்பட்டணம் துறைமுக பகுதியில் விபத்தில் இறந்த மீனவர்களுக்கு இதுவரை நிவாரண உதவிகள் வழங்கவில்லை. அவர்களுக்கு ஒக்கி புயலின்போது வழங்கியதை போன்ற நிவாரண உதவிகளை வழங்கவேண்டும்.

மீன்வளத்துறையின் ரூ.2 லட்சம் மானியத்துடன் நாட்டுப்படகுகளுக்கு வழங்கும் நிதியை விண்ணப்பித்த மீனவர்கள் அனைவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிள்ளியூர் வட்டத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்தும் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை. எனவே ரேஷன் கார்டுகளை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள தெரிவித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலர் ரேவதி, மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாதன், நாகர்கோவில் உதவி இயக்குனர் மோகன்ராஜ், பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜா, மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x