Published : 28 Nov 2020 03:44 PM
Last Updated : 28 Nov 2020 03:44 PM
கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது போல் நூலகத்துக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஈசிஆர் சாலையில் உள்ள விளம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையத்தில் புதுச்சேரி வாசகர் வட்டம் பாரதி புத்தகாலயம் சார்பில் புதுச்சேரி புத்தக மையம் தொடக்க விழா இன்று (நவ. 28) நடைபெற்றது. பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக மையத்தைத் தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி பேசுகையில், "பழைய காலத்தில் எது சொல்ல வேண்டுமானாலும், முக்கியமான புகார் இருந்தாலும் வாய்மொழியால் சொல்லப்பட்டு வந்தது. அதை எழுதி ஒரு புத்தகமாக ஆக்குவது பிறகுதான் ஏற்பட்டது. பைபிள் என்ற சொல்லுக்கு புத்தகம் என்றுதான் பொருள். அதுதான் முதன் முதலில் புத்தக வடிவமாக மேல்நாட்டில் வந்தது.
நமக்கு சந்தேகம் ஏற்பட்டால் புத்தகத்தைப் புரட்டிப் படித்துப் பார்த்துத் தீர்த்துக் கொள்ளலாம். அச்சு அடிப்பது வந்தபிறகுதான் புத்தகம் வந்தது. அதற்கு முன்பு புலவர்கள் கையால் எழுதி வைத்திருந்தது தான் இருந்தது. அவை அப்படியே தவறிபோய்விட்டது. அச்சடித்த புத்தகம் மட்டும்தான் இன்னமும் இருக்கிறது.
தற்போது புத்தகத்துக்குத் தொந்தரவும், ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் எல்லோரும் புத்தகத்தை விருப்பி படிப்பார்கள். இப்போது எல்லோரும் செல்போனை வைத்துக் கொள்கிறார்கள். படிப்பதற்கு நேரம் இல்லை. எல்லா செய்தியையும் சொல்போன் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். புத்தகத்தில் படிப்பதற்கும் அதாவது, கண்வழியாகவும் ஒரு கருத்தை பெறுவதற்கும், காது வழியாக ஒரு கருத்தை பெறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
காது மூலமாக செய்தி வந்தால் அது நம்மையும் மீறி மனதின் உள்ளே புகுந்து கொள்கிறது. அது பற்றி சிந்திக்க நேரமிருப்பதில்லை. புத்தகத்தைப் படிக்கும்போது ஏதாவது சந்தேகம் வந்தால் திரும்பி படித்து வேண்டியதை தெரிந்து கொள்ளலாம். தற்போது புத்தகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எப்படி சீர்தட்டுவது என்று நாமெல்லாம் சிந்திக்க வேண்டும்.
இளைஞர்களுக்குப் படிப்பதற்கு நேரமில்லை, ஆர்வமுமில்லை. 14-ம் நூற்றாண்டில் அச்சு ஏற்பட்ட பிறகுதான் மக்களுக்குப் புத்தகம் நிறைய போய் சென்றது. கையால் எழுத்தப்பட்ட சில புத்தகங்கள் மறைந்துவிட்டன. புத்தகங்களை படிப்பதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களுக்குப் புத்தகம் போய் சேர வேண்டும். மக்கள் புத்தகத்தை படிப்பதற்கும் நேரமும், ஆசையும் ஏற்பட வேண்டும். புத்தகம் மூலம் ஒரு கருத்து ஏற்றுக் கொண்டோம் என்றால், அதனை நாம் நிதானித்து ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம்" என்றார்.
கி.ராஜநாராயணனன் பேசும்போது, "பைபிளுக்கு அர்த்தம் புத்தகம் என்பது இன்று தான் எனக்குத் தெரியும். இதற்கு முன்பு தெரியாது. பைபிளை அச்சடித்த மாதிரிகள் இருக்கிறதே அது கணக்கு வழக்கு இல்லாத மாதிரிகள். உலகத்திலேயே அதிக விற்பனையுடையது என்பதில் ஆச்சரியமே கிடையாது. பைபிளை அங்கு புத்தகமாக வைத்துள்ளனர். நாம் இங்கே பனை ஓலைகளில் ஏடாக வைத்துள்ளோம்.
தமிழகத்தில் வரி செலுத்தப் போனால் நூலக வரி வசூலிப்பார்கள். இது புதுச்சேரியில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. இந்த நூலக வரி வசூலிப்பு எந்த நூலகத்துக்கும் பயன் கிடையாது. அது இப்போது இருக்கிறதா? என்பது தெரியவில்லை. நல்ல நோக்கத்துக்காக வசூலிக்கப்பட்டது. அது அப்படியே நூலகங்களுக்குப் பயன்பட்டிருந்தாலும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
ஆனால், இது தொடர்பாக எது கேட்டாலும், சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினாலும் பதில்கள் வரும், ஆனால் நடைமுறையில் இருக்காது. இது ஆட்சியாளர்களின் வழக்கமான ஒன்றுதான். மாலையில் வெளியே சென்று வருவது போன்று நூலகத்தையும் எட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஒன்று அனைவரிடமும் இருக்க வேண்டும். எந்த வேலைகள் இருந்தாலும் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது போல் நூலகத்துக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT