Published : 28 Nov 2020 02:31 PM
Last Updated : 28 Nov 2020 02:31 PM
கொடைக்கானல் மலைப்பகுதியிலிருந்து பழநி செல்லும் சாலையில் பாறை சரி்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள மண்ணின் ஈரப்பதம் அதிகரித்ததன் காரணமாக இன்று காலை கொடைக்கானல்- பழநி சாலையில் கோம்பைக்காடு அருகே பாறை சரிந்து சாலையில் விழுந்தது.
அந்த நேரத்தில் வாகனங்கள் அந்தவழியே செல்லாததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் பணியாளர்கள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதலில் இருசக்கரவாகனங்கள் சென்றுவர சாலை சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் விழுந்த பாறையை முழுமையாக அகற்றும்பணி நடைபெற்றது. இதையடுத்து நேற்று மாலையில் போக்குவரத்து சீரானது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால், விபத்துக்களை தவிர்க்க கொடைக்கானல்- வத்தலகுண்டு, கொடைக்கானல்- பழநி சாலையோரத்தில் உள்ள பாறைகளின் நிலை குறித்து நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என மலைகிராமமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT