Published : 28 Nov 2020 12:09 PM
Last Updated : 28 Nov 2020 12:09 PM
நவ.30 ஊரடங்கு நிறைவடைவதை அடுத்து அடுத்தக்கட்ட கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை தொடங்கியது.
தமிழகத்தில் ஊரடங்கு காலம் முடிவடைவதை ஒட்டி அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களிடம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக இன்று காலை அவர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கரோனா ஊரடங்கு காலத்தின்போது மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் மாதா மாதம் ஆலோசனை நடத்தி அவர்கள் அளிக்கும் பரிந்துரை மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் தகவல்களை ஆலோசனைக் கூட்டம் மூலம் பெற்று அதன் அடிப்படையில் இதுவரை ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் அமல்படுத்துவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்தில் 28, 29 தேதிகளில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடக்கும். முதலில் மாவட்ட ஆட்சியர்களுடனும் அடுத்து அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
மத்திய அரசு மருத்துவ நிபுணர் குழு பல மாநிலங்களில் அமல்படுத்தப்படவேண்டிய நடைமுறைகள் பற்றி அறிவித்தாலும் தமிழகத்தில் தனியாக மருத்துவக்குழு அமைத்து அதன் ஆலோசனைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நோய்ப்பரவல் கடுமையாகக் குறைக்கப்பட்டது. மருத்துவ நிபுணர் குழுவின் வழிகாட்டுதல் இதற்கு பெரிதும் உதவியது. இதன் காரணமாக நோய்த்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக உள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது.
பள்ளிகள், வழிபாட்டுத்தளங்கள், சுற்றுலாத்தளங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் திறப்பு என பல ஆலோசனைகள் மருத்துவ நிபுணர் குழு வழிகாட்டுதலின்படியே எடுக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 24-க்குப்பின் படிப்படியாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் ஊரடங்கு இந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை, ஊரடங்கு நீட்டிப்பு என்றால் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
முதற்கட்டமாக காலை 11-00 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்தக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், தலைமைச் செயலர், பேரிடர் மேலாண்மை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைச் சார்ந்த முதன்மைச் செயலர்கள், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT