Published : 27 Nov 2020 10:17 PM
Last Updated : 27 Nov 2020 10:17 PM
தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள்தொகை விகிதத்தை விட வாக்காளர் விகிதம் அதிகரித்துள்ளது. இங்கு தகுதியற்ற பதிவுகளை நீக்க மேற்பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் இன்று (நவ. 27) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநரும், கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பார்வையாளருமான மு.கருணாகரன் தலைமை வகித்தார்.
அப்போது மேற்பார்வையாளர் மு.கருணாகரன் பேசுகையில், "கடந்த 14.2.2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் கோவையில் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். பின்னர் நடந்த சிறப்பு சுருக்க முறை திருத்தும் தொடர்பான பணிகளினால் 21 ஆயிரத்து 190 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில்10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து 14 லட்சத்து 68 ஆயிரத்து 222 ஆண்கள், 15 லட்சத்து 2,142 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 369 பேர் என மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 பேர் உள்ளனர்.
கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மொத்தம் 66 ஆயிரத்து 775 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்படிவங்களை முறையாக ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை வலியுறுத்தி, உடனடியாக முகவர்களின் பெயர் பட்டியலை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் சூலூர் தொகுதிகளில் மக்கள்தொகை விகிதத்தினை ஒப்பிடுகையில், வாக்காளர் விகிதம் அதிகமாக உள்ளது. இத்தொகுதிகளில் உள்ள உயிரிழந்த மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர் பதிவுகளை கண்டறிந்து உரிய வழிமுறைகளை பின்பற்றி பதிவுகளை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒரே பாகத்தில் அதிகளவில் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து புலத்தணிக்கை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
18-19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் சேர்ப்பு எண்ணிக்கையும், பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் எண்ணிக்கையும், இளம் வாக்காளர்களின் உத்தேச மொத்த எண்ணிக்கையினை ஒப்பிடுகையில் மிகக்குறைவாக உள்ளது. 20-29 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை, உத்தேச மக்கள்தொகை கணக்கினை ஒப்பிடும் போது அதிகமாக உள்ளது.
வாக்காளர்கள் வயது விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, இளம் வாக்காளர்களை பதிவு செய்யவும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்கவும் உரிய முறையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் அதிகம் மற்றும் குறைவாக பதிவான வாக்குகள் உள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முத்துராமலிங்கம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT