Published : 27 Nov 2020 10:12 PM
Last Updated : 27 Nov 2020 10:12 PM
திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கி நாளை ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளும், நடப்பாண்டில் புதிய பணிகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியராக சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் புதிய வளர்ச்சிப்பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் ஆட்சியர் சிவன் அருள் இன்று (நவ. 27) கூறியதாவது:
"வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் மாவட்டம் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டு நாளை ஓராண்டை எட்டுகிறது.
புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்துத் துறைகளும் உடனுக்குடன் உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் உடனுக்குடன் உருவாக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 45 கிலோ மீட்டர் தொலைவுள்ள சேலம் வரை 4 வழிச்சாலைக்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
திருப்பத்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் பாதாள சாக்கடை திட்டம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப்பகுதியிலும் சாலை வசதி மேம்படுத்த அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் 36 வார்டுகளிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல, திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
அரசு மருத்துவமனையில் பல்வேறு புதிய சிகிச்சைப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு பிரிவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்து பரிசு பெற்றுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுக்குள் உள்ளது. இதுவரை 2 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சைக்காக நாட்றாம்பள்ளியில் தனியாக சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகர் பகுதியில் ரூ.109 கோடி மதிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் ரூ.14 கோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுமானப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும்.
மக்கள் நலத்திட்டப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் குறை தீர்வுக்கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 245 இடங்களில் சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறோம். இது மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் படிப்படியாக செய்து கொடுக்க என்னுடன் சேர்ந்து அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி நாளை (நவ. 28) ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை தமிழ் வளர்ச்சித்துறை தொடங்கப்பட உள்ளது. அதேபோல், நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இதில், அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்.பி. விஜயகுமார், டிஆர்ஓ தங்கய்யாபாண்டியன், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT