Published : 27 Nov 2020 08:30 PM
Last Updated : 27 Nov 2020 08:30 PM

தமிழக அரசின் அக்கறையின்மையால் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மறுப்பு: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசின் அக்கறையின்மையால் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (நவ. 27) வெளியிட்ட அறிக்கை:

"சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டு இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதுடன், மருத்துவர்களுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 31.8.2020 அன்று விளக்கமான தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அரசாணை வெளியிட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கையை முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதை செய்யவில்லை.

எனவே, தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமென அரசு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதன் பின்னரே அவசர கதியில் தமிழக அரசு 7.11.2020 அன்று அரசாணை வெளியிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதன் பின்னராவது உடனடியாக மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்கி முடித்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அணுகுவதை தவிர்த்திருக்க முடியும். அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினை நிறைவேற்றி முடித்திருக்க முடியும்.

தமிழக அரசு இவைகளை செய்யத் தவறியதன் விளைவாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு நடப்பாண்டுக்குப் பறிபோய்விட்டது. மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க இயலாது என பொருத்தமற்ற காரணங்களைச் சொல்லி வாதிட்டுள்ளது.

இவைகளால் தங்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. அரசு மருத்துவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் இவ்வகுப்புகளில் சேர்ந்து படிப்பதன் மூலம் இவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் தமிழ்நாட்டிலேயே பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வகுப்புகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடமளிப்பதால் இவர்கள் படிப்பை முடித்துவிட்டு தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இருதய நோய் போன்ற தனி சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையும் ஏற்படும்.

தமிழக மக்களுக்கு உயர் தனி மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்பில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தமிழக அரசு தலா ரூ. 2 கோடி செலவழிக்கிறது. தமிழக மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவழிக்கப்படும் மருத்துவப் படிப்புக்கான பலனை தமிழக மக்கள் அனுபவிப்பதே நியாயமாகும்.

மேற்கண்ட இந்த குறைபாடுகளை தவிர்ப்பதற்கு தமிழக அரசு முன்யோசனையுடன் செயல்படாததே முக்கிய காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உச்ச நீதிமன்றம் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை எனவும், இறுதி தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இறுதி தீர்ப்பிலும் இதே நிலைமை ஏற்பட்டால் தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். இவைகளை கணக்கில் கொண்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய சமர்ப்பிப்புகளையும், வாதங்களையும் முன்வைத்து இறுதி தீர்ப்பில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்வதுடன், இதன் மூலம் தமிழக மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைத்திடவும் உரிய முறையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x