Published : 27 Nov 2020 07:04 PM
Last Updated : 27 Nov 2020 07:04 PM
மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக 100 அடியை எட்டியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல் காட்சியளிக்கிறது அணையின் நீர்த்தேக்கப் பகுதி.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழையும், வட கிழக்குப் பருவமழையும் பொய்க்காமல் பெய்ததன் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம், இந்தாண்டு நான்காவது முறையாக இன்று (நவ. 27) 100 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று (நவ. 26) 6,512 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 8,111 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 250 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் வரத்தைக் காட்டிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால், மேட்டூர் அணை நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று மேட்டூர் அணை நீர் மட்டம் 99.32 அடியாக இருந்தது, இன்று காலை 99.32 அடியாக நீடித்த நிலையில், மாலையில் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT