Last Updated : 27 Nov, 2020 06:28 PM

 

Published : 27 Nov 2020 06:28 PM
Last Updated : 27 Nov 2020 06:28 PM

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குக: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சித்தரிப்புப் படம்.

மதுரை

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரை சொக்கிக்குளம் ஜிஎம்எஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''இந்தியாவில் 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 2.19 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் 16 லட்சத்து 42 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் அரசுப் பணியில் சி, டி பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர்.

மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களான தீபா, சங்கீதா ஆகியோர் காமன்வெல்த், பசிபிக் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 84 பதக்கங்கள் பெற்றுள்ளனர். இவர்கள் வேலையில்லாமல் வறுமையில் வாழ்கின்றனர்.

இவர்களில் தீபாவுக்கு 2010-ல் தமிழக அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கியது. சங்கீதாவும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர்கள் தங்களுக்கு அரசு வேலை கேட்டு அரசுக்குப் பல்வேறு மனுக்களை அனுப்பியுள்ளனர். இருப்பினும் இதுவரை அரசு வேலை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் இவர்கள் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற ஏராளமான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

எனவே தீபா, சங்கீதா மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர அரசுப் பணி வழங்கக் கோரி அரசுக்கு 9.11.2020-ல் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என் மனுவின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கு.சாமிதுரை, ஞானகுருநாதன் ஆகியோர் வாதிடுகையில், ''மாற்றுத்திறனாளி வீரர்களான தீபா, சங்கீதா இருவரும் பல்வேறு பதக்கங்கள் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இருவரும் ஏழ்மையில் உள்ளனர். இவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்'' என்றனர்.

பின்னர் நீதிபதிகள், ''சர்வதேசப் போட்டிகளில் மட்டும் இருவரும் 40க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளனர். தீபா தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்றுள்ளார். இவர்களுக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். இருவருக்கும் அரசுப் பணி வழங்க தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக டிச.17இல் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x