Published : 27 Nov 2020 05:59 PM
Last Updated : 27 Nov 2020 05:59 PM
போராடிப் பெற்ற சமூக நீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், முதல்வர் பழனிசாமியும், மத்திய பாஜக அரசும் கூட்டணியாகச் சேர்ந்து துரோகம் செய்தனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
''தமிழக மாணவர்களின் கனவினைச் சிதைத்த மத்திய பாஜக அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர் சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு கடுமையாக வாதிட்டதன் காரணமாக, இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாஜக அரசின் இந்தச் சமூக நீதி துரோகத்திற்குத் துணைபோகும் வகையில் - பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த இட ஒதுக்கீட்டை அளித்து அரசாணை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி அரசு, அதற்கான கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக அரசு விழா நடத்துவதிலும் - அதற்கான விளம்பரங்களிலும் நேரத்தைச் செலவிட்ட முதல்வர் பழனிசாமி, மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் துளி கூடக் கவனம் செலுத்தவில்லை.
போராடிப் பெற்ற சமூக நீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதல்வர் பழனிசாமிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT