Last Updated : 27 Nov, 2020 05:31 PM

1  

Published : 27 Nov 2020 05:31 PM
Last Updated : 27 Nov 2020 05:31 PM

டிச.1 முதல் ஆர்டிஓக்களில் பதிவு செய்யப்படும் பேருந்துகள், லாரிகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவி பொருத்துவது கட்டாயம்

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்களில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவி (விஎல்டிடி) பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் அனைத்து மண்டலப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்துப் பொதுச் சேவை வாகனங்களிலும் இருப்பிடக் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதோடு, அவசர கால பட்டன்களும் இருக்க வேண்டும். இந்த உத்தரவு இருசக்கர வாகனங்கள், இ-ரிக்ஷா, மூன்று சக்கர வாகனங்களுக்குப் பொருந்தாது. பொருத்தப்படும் கருவி ஏஐஎஸ்-140: 2016 தரத்தில் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனவும், அதன் நம்பகத்தன்மையை vahantracking.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறும்போது, "ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள பழைய வாகனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து பொதுச் சேவை வாகனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதன்படி, பொதுப் போக்குவரத்து பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், தனியார் நிறுவனப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், வேன்கள், தேசிய அனுமதி பெற்ற சரக்கு வாகனங்களில் கட்டாயம் விஎல்டிடி கருவியைப் பொருத்தியிருக்க வேண்டும்.

அப்படிப் பொருத்தியிருந்தால் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) வாகனங்கள் பதிவு செய்யப்படும். வாகனங்களின் பாதுகாப்பு, அதில் அனுப்பி வைக்கப்படும் சரக்குகளின் பாதுகாப்பு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும்" என்றார்.

கால அவகாசம் தேவை

அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சி.பி.பாலாஜி கூறும்போது, "புதிய வாகனங்களில் விஎல்டிடி கருவி பொருத்துவதால் பயன்தான்.

ஆனால், பழைய வாகனங்களுக்கும் பொருத்த வேண்டும் என்று திடீரென அறிவித்தால் அது எங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே கரோனா காரணமாக வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறோம். எனவே, திடீரென அறிவிக்காமல் அரசு எங்களுக்குப் போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x