Published : 27 Nov 2020 05:18 PM
Last Updated : 27 Nov 2020 05:18 PM
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், நிவர் புயல் பாதிப்பால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், ஒருசில பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி இரவு தொடங்கிய கனமழை அடுத்த நாள் மாலை வரை நீடித்தது. புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மாவட்டம் முழுவதும் 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 800க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வருவாய்த் துறையினர், காவல் துறையினர் வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பு, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்டது. ஆம்பூரில் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், சாலையோரங்களில் வசித்தவர்கள், நீர்நிலைகளுக்கு அருகாமையில் குடியிருந்தவர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆம்பூர் ஆணைமடகு தடுப்பணை நிரம்பி அதிலிருந்து வெளியேறிய மழைநீர், மாங்காய்தோப்பு, நதிஷீலாபுரம், அண்ணா நகர், மூக்காகொல்லை, கஸ்பா, ரெட்டிதோப்பு, சிவராஜ்புரம் வழியாக பாலாற்றில் நேற்று கலந்தது.
இதனால், அண்ணாநகர் மற்றும் மூக்காகொல்லை ஆகிய பகுதிகளில் வசித்து வந்த 120 குடும்பத்தைச் சேர்ந்த 400 பேரை ஆம்பூர் வருவாய்த் துறையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
இந்நிலையில், ஆம்பூர் நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களைத் தமிழக வணிகரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று (நவ. 27) சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் மற்றும் வீடு இழந்த 4 பேருக்கு அரசின் உடனடி நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில், "நிவர் புயல் பாதிப்பை முன்கூட்டியே அரசு கணித்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடன் தமிழக அரசு அதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. நிவர் புயல் பாதிப்பு வடமாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பாகச் செய்யப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் 4,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். காவல் துறையினர், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், பொதுப்பணித் துறையினர், சுகாதாரத் துறையினர் இணைந்து நிவர் புயல் பாதிப்பை எதிர்கொண்டனர். இதனால், பெரும் சேதம் இம்மாவட்டத்தில் தவிர்க்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு கிடையாது. 10 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 5 ஏக்கரில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 15 முதல் 20 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. ஆனால், உயிர் சேதம் ஒன்றுகூட ஏற்படவில்லை. ஆம்பூர் பகுதியில் சற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். மீட்புப் பணிகளில் அரசு அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டு வருகின்றனர். விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும்.
நிவர் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT