Last Updated : 27 Nov, 2020 02:16 PM

 

Published : 27 Nov 2020 02:16 PM
Last Updated : 27 Nov 2020 02:16 PM

புதுச்சேரியில் நிவர் புயலால் வேருடன் சாய்ந்த 60 ஆண்டுகால பழமையான ஆலமரம்; உயிர்ப்பிக்க மீண்டும் நட்ட முன்னாள் மாணவர்கள்  

நிவர் புயலால் வேருடன் சாய்ந்து ஆலமரம் மீண்டும் நடப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் வேருடன் சாய்ந்த 60 ஆண்டுகால பழமையான ஆலமரத்தினை அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உயிர்ப்பிக்க மீண்டும் நட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல், புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. அவ்வாறு சாய்ந்த மரங்களைத் தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் பல பிரிவுகளாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த 60 ஆண்டுகால பழமையான ஆலமரம் இந்த நிவர் புயலால் வேருடன் சாயந்தது. இதனை அறிந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து இரண்டு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மீண்டும் அந்த மரத்தினைத் துணை வேர்களுடன் அதே இடத்தில் நட்டு உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் முன்னாள் மாணவர் சண்முகம் என்பவர் கூறும்போது, "இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நாங்கள். 1992-ல் கல்வி பயின்றோம். இங்குதான் புதுச்சேரியின் முதல்வர் நாராயணசாமியும் படித்தார். இந்த ஆலமரத்தின் நிழலில்தான் நாங்கள் படித்தோம்.

இந்த ஆலமரம் தற்போது வீசிய நிவர் புயலில் வேருடன் சாய்ந்துவிட்டது. இதனால் பழைய நினைவுகள் அனைத்தும் எனக்குள் வந்துவிட்டன. எனவே, அந்த ஆலமரத்தை எப்படியாவது உயிர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்தேன். இதனால், உடனே நான் எனது நண்பர்களான முன்னாள் மாணவர்களுக்கு இதுபற்றி வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்து அவர்களை ஒருங்கிணைத்தேன்.

சுமார் 15 பேர் சேர்ந்து 2 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சுமார் 5 மணி நேரமாக பணிகள் மேற்கொண்டு மீண்டும் அதே இடத்தில் அந்த மரத்தினை அதன் துணை வேர்களுடன் நட்டுள்ளோம். எங்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளித்தனர். இந்த மரத்தினை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். வேறு நோக்கம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x