Published : 27 Nov 2020 07:39 AM
Last Updated : 27 Nov 2020 07:39 AM

முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதால் புயலால் விழுந்த 498 மரங்கள் உடனுக்குடன் அகற்றம்: சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை

முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதால், நிவர் புயலால் சென்னை மாநகரப் பகுதியில் விழுந்த 498மரங்களும் உடனுக்குடன் அகற்றப்பட்டு, போக்குவரத்து இடையூறு தவிர்க்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர்ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘நிவர்' அதிதீவிரப் புயல் சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில், புதுச்சேரி அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளில் கடந்த 25, 26 தேதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மாநகராட்சியின் துரித நடவடிக்கையாலும், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகார்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநகராட்சியின் பணியை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

புயலால் விழுந்த மரங்களை சிறப்பாக கையாண்டு அகற்றியது தொடர்பாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஜெ.மேகநாதரெட்டி கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் 371 மரங்களை அறுக்கும் மோட்டார் கருவிகள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 கருவிகள், 6 தானியங்கி மரம் அறுக்கும் கருவிகள், 17 டெலஸ்கோப்பிக் மரம் அறுக்கும் கருவிகள் உள்ளன. இந்த 371 மரம் அறுக்கும் கருவிகள், சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தேவை அடிப்படையில் 2 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கருவிகளை பயன்படுத்தும்போது சில நேரங்களில் செயின் அறுந்துவிடும். அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு 200செயின்கள், அவற்றுக்கு தேவையான எண்ணெய்கள், எரிபொருள் உள்ளிட்டவை வாங்கி இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தயார்நிலையில் குழுக்கள்மேலும் ஏற்கெனவே திட்டமிட்டபடி, மண்டலத்துக்கு ஒருமரம் அறுக்கும் குழு அமைக்கப்பட்டது. இரவு நேர புகார்களை எதிர்கொள்ளவும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் அக்குழுவுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். அக்குழு விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றத் தொடங்கிவிடும்.

கட்டுப்பாட்டு அறை மட்டுமல்லாது, அதிகாரிகளின் கைபேசிஎண்கள், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவற்றில் வரும் புகார்
கள் அடிப்படையிலும் மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ட்விட்டரில் அவர்கள் பதிவை போட்டதும். அடுத்த சில நிமிடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மரம் வெட்டும் படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, பொதுமக்கள் பாராட்டினர்.

காவல் துறையும் உதவி

கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் மட்டும் சென்னையில் 498 மரங்கள் விழுந்துள்ளன. அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இப்பணியில் காவல் துறையும், தீயணைப்புத் துறையும் உதவி செய்துள்ளன. மரம் அறுக்கும் தொழில் செய்யும் தனியாரையும் ஏற்கெனவே அடையாளம் கண்டு வைத்திருக்கிறோம். தேவை அடிப்படையில் அவர்களையும் அழைத்து மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக உடனுக்குடன் மாநகராட்சியால் மரங்களை அகற்ற முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே சென்னையில் புயலால் விழுந்த மரங்களை அகற்ற நவீன கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஷ்யாம் என்ற இளைஞர், “புயல் நிவாரணப் பணிகள் எல்லாம் முடிந்த பின்பு, மரங்கள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் மரங்களை நடவேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு, ‘கண்டிப்பாக தம்பி’ என முதல்வர் பழனிசாமி பதிவிட்டிருந்தார். முதல்வரின் இந்த கனிவான பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

மரக்கன்றுகள் நடப்படும்

இது தொடர்பாக துணை ஆணையர் ஜெ.மேகநாதரெட்டி கூறும்போது, “சென்னையில் இந்த ஆண்டு மட்டும் மழையால் இதுவரை 700-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் வழி
காட்டுதலில், இளைஞருக்கு முதல்வர் உறுதியளித்தபடி, மரங்கள் விழுந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்படும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டுதல்படி, ஒரு மரம் விழுந்த இடத்தில், வசதி இருந்தால் 10 மரக்கன்றுகள் நடவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x