Last Updated : 02 Oct, 2015 12:44 PM

 

Published : 02 Oct 2015 12:44 PM
Last Updated : 02 Oct 2015 12:44 PM

30 வருடங்களாக மூடிக்கிடக்கும் அரசின் பம்ப்செட் பரிசோதனைக் கூடம்: தரச்சான்றுக்கு தனியாரை தேடிச் செல்லும் நிறுவனங்கள்

கோவையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பம்ப்செட் தர பரிசோதனை மையம் 30 வருடங்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரும் தொகையை செலவழித்து தனியாரிடம் தர பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

கோவையில் நூற்பாலைகளுக்கு அடுத்தபடியாக அதிகளவில் பம்ப்செட் உற்பத்தி செய்யப்படுகிறது. மோனோபிளாக், ஜெட் பம்ப், செல்ப்பிரேமிங், போர்வெல் பம்ப் என பல வகையான பம்புகள் கோவையில் தயாராகின்றன. இது தவிர பம்ப்செட் உற்பத்தியைச் சார்ந்து, உதிரிபாகத் தயாரிப்பு, ஜாப் ஆர்டர்களை செய்து கொடுக்கும் சிறிய அளவிலான நிறுவனங்கள் என சுமார் 20 ஆயிரம் நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பம்ப்செட் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றன. தமிழகத்திலேயே அதிக அளவாக நாளொன்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான பம்ப்செட்டுகள் கோவையில் தயாராகி வருகின்றன.

இப்படி பம்ப்செட் உற்பத்தியில் கோவை மாவட்டம் தனித்துவம் பெற்றிருந்தாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக அரசு செய்து கொடுத்துள்ள வசதி வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. குறிப்பாக, பம்ப்செட்டுகளை தர ஆய்வுக்கு உட்படுத்த அரசு அமைத்துக் கொடுத்த பரிசோதனை மையம் சுமார் 30 வருடங்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பம்ப்செட் மாடல் உற்பத்தி செய்யும்போது, லட்சக்கணக்கில் பணம் செலுத்தி அவற்றை தர ஆய்வுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாக தொழில் முனைவோர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட தொழில் மையத்தின் கட்டுப்பாட்டில் கோவை - அவிநாசி சாலையில் மண்டல சோதனை ஆய்வுக்கூடம் இயங்குகிறது. இங்கு உற்பத்திப் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, தர பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றின் அடிப்படையில், இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) ஐஎஸ்ஐ முத்திரையை வழங்குகிறது.

ஆனால், கோவையின் முக்கியமான உற்பத்திப் பொருளான பம்ப்செட்டுகளுக்கு இந்த பரிசோதனை மையத்தில் தர பரிசோதனை செய்யப்படுவதில்லை. இதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள், கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு பயன்பாடில்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இயந்திரங்கள் அனைத்தும் துருப்பிடித்து, செயலிழந்து மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இந்த பொது பம்ப்செட் பரிசோதனைக் கூடத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் எளிதில் தரச்சான்று பெற முடியும் வாய்ப்புள்ளது.

தொடர் கோரிக்கை...

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் (கோப்மா) இப் பரிசோதனைக் கூடத்தை புனரமைத்து திறக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். சங்கத்தின் தலைவர் கே.மணிராஜ் கூறும்போது, ‘பம்ப்செட்டுகளை எவ்வளவு தரமாக தயாரித்தாலும், அதை தரப்பரிசோதனை மூலமே நிரூபிக்க முடியும். அதற்காகவே ஒவ்வொரு தயாரிப்பின் போதும் தரச் சான்று பெற வேண்டியுள்ளது. சாதாரண சிறிய ரக பம்ப்செட்டுக்கு தர பரிசோதனை செய்ய குறைந்தபட்சம் ரூ.6000 செலவாகிறது. கோவையில் மத்திய அரசின் தர பரிசோதனை மையம் முழுமையாக செயல்படுவதில்லை. தனியார் பங்களிப்புடன் உள்ள ஒரு மையத்தில் தான் தர பரிசோதனை செய்து வருகிறோம்.

ஏற்கெனவே 30 வருடங்களுக்கு முன்பு மாநில அரசால் அமைக்கப்பட்ட மையம், பயனற்ற நிலையில் இருக்கிறது. அதை 2010-ம் ஆண்டே ரூ.30 லட்சம் செலவில் புனரமைக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் திட்டம் கிடப்பிலேயே இருப்பதால், வேறு வழியின்றி தனியாரைத் தேடிச் செல்ல வேண்டியுள்ளது’ என்றார்.

ஊழியர்கள் எண்ணிக்கை

அவிநாசி சாலையில் உள்ள மண்டல சோதனை ஆய்வுக்கூடத்தில் பெரிய அளவில் எந்தவொரு ஆய்வுகளும் செய்யப்படுவதில்லை. செங்கல், சிமென்ட், ஹாலோ பிளாக், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன. மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பம்ப்செட் பரிசோதனைக்கூடம் செயல்படுத்த வேண்டுமென்றால் தனியாக துணை இயக்குநர் பொறுப்பையும், கூடுதலாக ஊழியர்களையும் நியமிக்க வேண்டியுள்ளது என்கின்றனர் துறை அதிகாரிகள்.

மிக மிகக் குறைவு...

இந்த ஆய்வுக்கூடத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் உள்ளன. ஆனால் தயாரிப்புப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு போதுமான தண்ணீர் வசதி கூட இல்லை என்கின்றனர் அங்குள்ள ஊழியர்கள். உப்புத்தன்மையுள்ள நீர் மட்டுமே இங்கு கிடைக்கிறது. அதில் பொருட்களை பரிசோதனை செய்ய முடியாது. நல்ல தண்ணீரை வெளியிலிருந்து வாங்குவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் இன்றி, சாக்கடை கால்வாயை ஒட்டி, முற்றிலும் புதர் மண்டி எந்தவொரு பாதுகாப்புமின்றி காணப்படுகிறது இந்த மண்டல சோதனை ஆய்வுக்கூடம். இதனை நல்ல நிலைக்கு கொண்டு வந்தால், தொழில் நகரமான கோவைக்கு நல்ல பலனளிக்கும் நிலை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x