Last Updated : 27 Nov, 2020 07:25 AM

 

Published : 27 Nov 2020 07:25 AM
Last Updated : 27 Nov 2020 07:25 AM

நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் துறை கணக்கெடுப்பில் தகவல்

சென்னை

நிவர் புயலால் 7 மாவட்டங்களில் 8,470 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

நிவர் புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடப்பதற்கு முன்பும், கரையைக் கடந்த பின்னரும் 10-க்
கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால், ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் (ஒரு ஹெக்டேர் இரண்டரை ஏக்கர்) பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

இதையடுத்து, பயிர் சேதங்களை வேளாண் துறை அதிகாரிகள் நேற்று கணக்கிட்டனர். அதன்படி, மொத்தம் 9,468 ஹெக்டேரில் நெற்பயிர் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெற்பயிரைப் பொருத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 750 ஹெக்டேர், செங்கல்பட்டு 2,760, ராணிப்பேட்டை 205, திருவண்ணாமலை 526, விழுப்புரம் 1,032, கடலூர் 1,134, திருவள்ளூர் 2,063 என மொத்தம் 8,470 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதர பயிர்கள் சேதம்

மேற்கண்ட மாவட்டங்களில் 428 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளும், 570 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், 998 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த இதர பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. ஆகமொத்தம் 9,468 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் உள்ளிட்ட விவசாயபயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவர் புயல், மழையால் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேற்று கணக்கிட்டனர். அதில், வேலூர்,கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 382 கிராமங்களில் 1,334 விவசாயிகள் 914 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழை, மரவள்ளிக்கிழங்கு, தர்பூசணி, பப்பாளி, காய்கறிகள் ஆகியபயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x