Published : 26 Nov 2020 06:55 PM
Last Updated : 26 Nov 2020 06:55 PM
திருநெல்வேலியில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு மண் அகல்விளக்குகள் உற்பத்தி இவ்வாண்டு குறைந்திருக்கிறது.
கரோனா பாதிப்பு, தொடர் மழை, வேலையாட்கள் பற்றாக்குறை என்று பல்வேறு பிரச்சினைகளால் போதிய உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று மாலையில் கோயில்களிலும், வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்படும்.
இதற்காக அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அதேநேரத்தில் போதிய அளவுக்கு உற்பத்தி செய்யப்படவில்லை என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலப்பாளையம் குறிச்சி, காருகுறிச்சி, தேன்பொத்தை, இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடந்த மாதத்திலிருந்து மண் அகல்விளக்குகள் உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 5 மி.லி. முதல் 1 லி வரையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் வகையில் இந்த விளக்குகள் தயாரிக்கப்பட்டன.
ஆனால் கடந்த சில வாரங்களுக்குமுன் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் விளக்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. கரோனாவால் கடந்த பல மாதங்களாக தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொழிலாளர்கள் பலரும் சமையல் வேலை, கூலி வேலை என்று வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டதால், இந்த சீஸனில் அகல் விளக்கு உற்பத்தி செய்ய போதுமான பணியாளர்கள் கிடைக்காமலும் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மேலும், கரோனாவால் கொள்முதல் செய்ய அதிகளவில் வெளிமாவட்ட, கேரள வியாபாரிகள் பெருமளவுக்கு ஆர்டர் அளிக்காததாலும் குறைந்த அளவுக்கே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.
உற்பத்தி செய்யப்பட்டிருந்த விளக்குகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக குறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க துணை தலைவர் ஏ. கணேசன் கூறும்போது, திருக்கார்த்திகை திருவிழாவுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அகல் விளக்குகளுக்கு ஆர்டர்கள் வந்துவிடும்.
இவ்வாண்டு கரோனாவால் ஆர்டர்கள் அவ்வளவாக வரவில்லை. முன்கூட்டியே தயாரிக்கவில்லை என்பதால் அதிகளவில் அகல்விளக்குகளை உற்பத்தி செய்யமுடியவில்லை. மேலும் கடந்த வாரத்தில் மழையாலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டைப்போலவே விளக்குகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விலையை உயர்த்தவில்லை.
விளக்குகளின் தரத்தை பொருத்து மொத்த விலையில் அகல்விளக்குகள், அடுக்கு விளக்குகள், ஜோடி விளக்குகள் என்று விதவிதமான விளக்குகள் ரூ.2 முதல் ரூ.40 வரை இங்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறார்கள்.
மண்பாண்ட தொழில் நசிந்து வருகிறது. மண்பாண்ட உற்பத்திக்கு தேவையான மணலை எடுப்பதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் போதுமான மணல் கிடைப்பதில்லை. கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அந்த அட்டைகளை வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 6 டன் மணல் எடுக்க அனுமதி அளித்தால்போதும். கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே தற்போது மண்பாண்ட தொழிலை மேற்கொள்ளும் சூழல் உள்ளது. கிராமங்களில் இத் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் இல்லை.
தேவையான மணல் கிடைப்பதில்லை. இதனால் வேறுதொழில்களுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். இத் தொழிலை அழிவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT