Published : 26 Nov 2020 07:00 PM
Last Updated : 26 Nov 2020 07:00 PM
கஜா புயலுக்கு முழுமையான நிவாரணம் அளிக்காத மத்திய அரசு, தேர்தல் அவசரத்தில் தற்போது நிவாரணம் வழங்க முன் வந்துள்ளது. அதிலாவது மக்களுக்கு நல்லது நடக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
“இங்குள்ள மக்களின் கஷ்டங்களை, பார்த்தாலே கண்கூடாகத் தெரிகிறது. இங்குள்ளவர்கள் கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகளாக இங்கேயே வசிப்பவர்கள். பேரன் பேத்தியெல்லாம் எடுத்தவர்கள். இவர்களுக்குத் தொடர்ச்சியாக, நன்மை செய்கிறோம், வேறு இடம் கொடுக்கிறோம், வீடு பார்க்கிறோம் என்று பல அரசுகள் சொன்னதை நம்பி ஏமாந்து ஏமாந்து இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது எங்களுக்குப் புதுசு கிடையாது. நாங்கள் 40 ஆண்டுகளாக நற்பணி செய்து வருகிறோம். நாங்கள் அரசு கிடையாது. எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். மழைக்காலத்தில் அவ்வப்போது சாம்பார் சாதம் கொடுப்பதும், பழைய துணி கொடுப்பதும் தீர்வாகாது என்று சொல்கிறோம்.
எங்களால் முடிந்ததை, இவர்கள் கோரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டுசென்று கேட்போம். இவர்களுக்கு பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, எங்களின் கடமையும்கூட. அதனால் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க நாங்கள் முயற்சி செய்வோம்”.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரசாங்கம் சார்பாக செய்யவேண்டிய முறையான வழிமுறைகளைச் செய்துள்ளார்களா?
செய்யவில்லை என்பதுதான் இங்குள்ளவர்களின் குற்றச்சாட்டே. அவர்கள் உயிருக்கு பயந்து வசிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. எங்களுக்கு வேறு இடம் கொடுங்கள், போய் விடுகிறோம் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
அரசாங்கம் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்களா?
நிவாரணம் எனது அந்தந்த வருஷத்துக்குக் கொடுப்பது. இங்கு கொடுத்த வாக்குறுதியை தேர்தல் நேரத்திலாவது நிறைவேற்ற வேண்டும். வீடு கொடுக்காமல் வீடு ஒதுக்கியதாக கணக்குக் காட்டியுள்ளார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர்கள் பெயரில் வீடு வராதபோது அந்த சகாயம் எல்லாம் எங்கு காட்டப்படுகிறது என்பதுதான் கேள்வி. சகாயத்தை இவர்கள் மீது காட்டியிருக்க வேண்டும்.
தமிழக அரசு புயலைக் கையாண்ட விதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பல உயிர் சேதங்களுக்குப் பின்னர் கற்றுக்கொண்ட பாடம். அதை முன்பே ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்வி. இந்த ஆண்டு சென்னை கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், சிறப்பாக இருந்ததா? என்றால் இங்குள்ள மக்களிடம் கேளுங்கள். ஏனென்றால் அரை மணி நேரம் முன்பு வந்து வீட்டைக் காலி பண்ணுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு அனைத்து நிலவரங்களும் தெரியும். எத்தனையோ படித்தவர்கள் உடன் இருக்கிறார்கள் அவர்களுடன்.
2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கும்போது அறிவிப்பு இல்லை. இப்போது நொடிக்கு நொடி அறிவிப்பு வருகிறது. எடப்பாடி சிறப்பாகச் செயல்படுகிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
எச்சரிக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக அவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எச்சரிக்கப்பட்டிருப்பது என்பது எங்களால்தான்.
முதல்வர் போகும் இடம் எல்லாம் விளம்பரத் தட்டி தேவையா?
விளம்பரம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. மக்களுக்கு அவர்களின் அன்றாடத் தேவை என்னவோ அதுதான் முக்கியம். விளம்பரத் தட்டி விழுந்து எத்தனையோ உயிர்கள் போயுள்ளன. சென்னையிலும் நடந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் தமிழகம் முழுவதும் சென்று வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்குமா?
எங்கள் ஆட்கள் ஆங்காங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். அரசு போல எங்களிடம் கஜானா இல்லை. இன்று நான் வந்ததையே கொண்டு செல்லுங்கள். ஏழைகள் அனைத்து இடங்களிலும் ஏழைகள்தான்.
கடலூர், விழுப்புரத்தில் அதிக அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து?
இன்னும் கஜா புயல் நிவாரணமே முழுமையாகச் சென்று சேரவில்லை. நாங்கள் கேட்போம். இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுப்போம்.
கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாகக் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது நிவாரணத் தொகையைத் தருவதாகச் சொல்கிறார்கள்? இது மக்கள் மீதுள்ள அக்கறையா? அல்லது தேர்தலுக்காகவா?
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நானும் வேண்டுமானால் சொல்கிறேன். கண்டிப்பாக தேர்தல் அவசரம்தான். அதிலாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.
புயலை எதிர்கொள்ளத் தமிழகம் தயாராகவில்லை என்று சொல்கிறீர்களா?
இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பது ஊரறிந்த உண்மை. சென்னையைப் பொறுத்தவரை முன்பிருந்ததை விடச் சிறப்பாக இருந்தது. ஆனால், பாராட்டுக்குரியதாக இருந்ததா என்றால் இல்லை. ஏனென்றால் இவர்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது பாராட்ட ஒன்றுமில்லை.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT