Published : 26 Nov 2020 06:40 PM
Last Updated : 26 Nov 2020 06:40 PM
தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டன.
மேலும், பிஎஸ்என்எல், அஞ்சல் துறை போன்ற மத்திய அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிப்படைந்தன. மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த 893 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாய மசோதாக்களை கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட முறைசாரா தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும். துறைமுகங்களை தனியார் மயமாக்கக் கூடாது. தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்களும், மாநில அளவிலான தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி இன்று பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன.
மூன்று ஷிப்ட்டுகளில் பணி செய்யும் தொழிலாளர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் துறைமுகத்தில் சரக்கு கையாளும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் தடைபட்டன. இதன் காரணமாக துறைமுகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் அஞ்சல் துறையின் பெரும்பான்மை ஊழியர்கள் அங்கம் வகிக்கும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் கலந்து கொண்டது. 70 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான தபால் நிலையங்கள் மூடப்படிருந்தன. குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு தலைமை அஞ்சலகம் உள்ளிட்ட சில முக்கியமான அஞ்சலகங்கள் மட்டும் செயல்பட்டன. அவற்றிலும் பல சேவைகள் நடைபெறவில்லை. இதேபோல் பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேலும், வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி வரித்துறை போன்ற மத்திய அரசு அலுவலகங்களிலும் நேற்று பணிகள் பாதிப்படைந்தன. அதேநேரத்தில் மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பேருந்து, லாரி, ஆட்டோ போன்ற வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் பெரியார் சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு எல்பிஎப் நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். இதில் எல்பிஎப் சுசீ.ரவீந்திரன், சிஐடியூ சங்கரன், ஐஎன்டியூசி ராஜகோபாலன், பாலசிங்கம், ஏஐசிசிடியு சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலையில் அமர்ந்து மறியல் செய்த 17 பெண்கள் உள்ளிட்ட 93 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் திருச்செந்தூரில் 27 பெண்கள் உள்ளிட்ட 46 பேர், ஸ்ரீவைகுண்டத்தில் 9 பெண்கள் உள்ளிட்ட 47 பேர், ஓட்டப்பிடாரத்தில் 18 பெண்கள் உள்ளிட்ட 55 பேர், கோவில்பட்டியில் 20 பெண்கள் உள்ளிட்ட 80 பேர், கழுகுமலையில் 100 பெண்கள் உள்ளிட்ட 150 பேர், கயத்தாறில் 20 பெண்கள் உள்ளிட்ட 40 பேர், விளாத்திகுளத்தில் 70 பெண்கள் உள்ளிட்ட 157 பேர், எட்டயபுரத்தில் 63 பெண்கள் உள்ளிட்ட 118 பேர், சாத்தான்குளத்தில் 19 பேர், நாசரேத்தில் 16 பெண்கள் உள்ளிட்ட 53 பேர் என மாவட்டம் முழுவதும் 360 பெண்கள் உள்ளிட்ட 893 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தூத்துக்குடி பழைய துறைமுக நுழைவு வாயில், துறைமுக கிரீன் கேட் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment