Published : 26 Nov 2020 06:46 PM
Last Updated : 26 Nov 2020 06:46 PM
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நிவர் புயல் நிவாரணப் பொருட்களுடன் 100 தூய்மைப் பணியாளர்கள் விழுப்புரம் நகராட்சி பகுதிக்குச் சென்றுள்ளனர்.
மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் இவர்களை அனுப்பி வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியிலிருந்து நிவர் புயல் நிவாரண பணிக்காக விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது தலைமையில் 100 தூய்மை பணியாளர்கள், உதவி பொறியாளர்கள் 2 பேர், சுகாதார ஆய்வாளர்கள் 2 பேர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் 4 பேர் மூன்று லாரிகள், நீரிறைக்கும் டீசல் எஞ்சின்கள் , மரம் அறுக்கும் இயந்திரங்கள் 5, 80 மூடை பிளிச்சீங் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் புறப்பட்டு சென்றனர்.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து ஆணையர் வழி அனுப்பி வைத்தார். மாநகர பொறியாளர் பாஸ்கர், மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலானது. பின்னர், அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) உருவாகி நேற்றிரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துவிட்டது.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நிவர் புயல் நிவாரணப் பொருட்களுடன் 100 தூய்மைப் பணியாளர்கள் சென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT