Last Updated : 26 Nov, 2020 05:52 PM

2  

Published : 26 Nov 2020 05:52 PM
Last Updated : 26 Nov 2020 05:52 PM

அதிமுக- பாஜக கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம்: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தகவல்

ரங்கசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

ஏற்கெனவே உள்ள அதிமுக- பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம் என புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணியைத் தொடங்கி, செய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

இதன் காரணமாக, ரெட்டியார்பாளையத்தில் இருந்த கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு, புதுச்சேரி ஈசிஆர் சாலையில் புதிதாகக் கட்சி அலுவலகம் திறக்க கடந்த மாதம் பூமி பூஜை போடப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்த பிலையில் இன்று (நவ. 26) அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவில் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கலந்து கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து பூஜை செய்தார். பின்னர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி அலுவலகம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரைகளுக்கு தீபாராதனை காண்பித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவ்விழாவில், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், திருமுருகன், கோபிகா, அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

பின்னர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தல் பணி இன்று முதல் தொடங்குகிறது. ஏற்கெனவே உள்ள அதிமுக- பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடனான கூட்டணியில்தான் போட்டியிடும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x