Published : 26 Nov 2020 02:57 PM
Last Updated : 26 Nov 2020 02:57 PM

வலுவிழந்தது நிவர்; காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுகிறது; 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

நிவர் புயல் தற்போது வட தமிழகக் கடலோரப் பகுதியில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 6 மணி நேரத்தில் மாறக்கூடும். பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“நிவர் புயல் தற்போது வட தமிழகக் கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வடக்கு- வடமேற்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு மேற்கு - தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 6 மணி நேரத்தில் மாறக்கூடும்.

அதற்கடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலு குறைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக, தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 70லிருந்து 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று மாலை காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து காற்று மணிக்கு 50 இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கனமழை

வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் .

மழை நிலவரம்:

இன்று (26-11-2020) வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (27-11-2020) அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

தாம்பரம் (செங்கல்பட்டு) 31 செ.மீ., பாண்டிச்சேரி (புதுச்சேரி) 30 செ.மீ., விழுப்புரம் (விழுப்புரம்) 28 செ.மீ., கூடலூர் (கூடலூர்) 27 செ.மீ., டிஜிபி ஆஃபீஸ் (சென்னை) 26 செ.மீ., சோழிங்கநல்லூர் (சென்னை) 22 செ.மீ., தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) 19 செ.மீ., பரங்கிப்பேட்டை (கூடலூர்) 18 செ.மீ., பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 17 செ.மீ., சோழவரம் (திருவள்ளூர்) 16 செ.மீ.

செஞ்சி (விழுப்புரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு), திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 15 செ.மீ., திண்டிவனம் (விழுப்புரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கொள்ளிடம் (நாகப்பட்டினம்), புவனகிரி (கூடலூர்) தலா 14 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x