Published : 26 Nov 2020 09:42 AM
Last Updated : 26 Nov 2020 09:42 AM
கடல் உள்வாங்காததால் நகரில் தண்ணீர் தேங்கியுள்ளது, 144 தடை உத்தரவு விலக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும், காரைக்கால் மீனவர்கள் அனைவரும் கரை திரும்பி விட்டனர் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் நகர் முழுக்க புயல் பாதிப்புப் பணிகளை இன்று (நவ. 26) காலை முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்யத் தொடங்கினார். நகரெங்கும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. நேற்று இரவிலிருந்து மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்றும், மழைப் பொழிவும் உள்ளது. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
புயல் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "மழைநீரை கடல் உள்வாங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்கிறது. அதனால் கடலுக்குள் தண்ணீர் செல்லவில்லை. பாவாணர் நகர், ரெயின்போ நகர், இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை மற்றும் நகரப்பகுதிகள் என புதுச்சேரியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் வரவில்லை. மக்கள் வீட்டில் இருந்ததால் பாதிப்பு இல்லை. தடைப்பட்ட மின்சாரத்தை மீண்டும் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தண்ணீரை கடலுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம். 144 தடை உத்தரவு விலக்கப்படுகிறது. நிவாரண முகாமில் 2,000 பேர் உள்ளனர். அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதையடுத்துக் கணக்கெடுப்போம். காற்று விட்டு, விட்டு வந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. காரைக்கால் மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT