Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM
சென்னை குடிநீர் தேவைக்காக தமிழகம்மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே தெலுங்கு - கங்கை ஒப்பந்தம் 1983-ல்போடப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் ஆந்திர அரசு, தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை, ஆந்திர மாநிலம் - கண்டலேறு அணையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் - பூண்டி ஏரிக்கு கொண்டு வருவதற்காக 177.275 கி.மீ தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி கடந்த 1983 முதல் 96-ம்ஆண்டு வரை நடைபெற்றது.
இதையடுத்து, 1996-ம் ஆண்டுமுதல் கிருஷ்ணா நதி நீர், தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகப் பகுதிகளில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதிகள் அவ்வப்போது பெய்யும் பெருமழையின் போது, சேதமடைந்து விடுகிறது. அந்த சிறு பகுதிகளை மட்டும் பொதுப்பணித் துறையினர் சீரமைக்கின்றனர்.
இந்நிலையில் 2014 -ம் ஆண்டுசட்டப்பேரவையில் 110 விதியின்கீழ், இரு கட்டங்களாக கிருஷ்ணா கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெறும் என, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, முதல்கட்டமாக, தமிழகபகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயின் ஒரு பகுதி 2015-ல் சீரமைக்கப்பட்டது. 2-வது கட்டமாக கிருஷ்ணாகால்வாய் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறைஅதிகாரிகள் தெரிவித்ததாவது:
சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் பகுதிகளில் 2015-ல் முதல்கட்டமாக ரூ.19.88 கோடி மதிப்பீட்டில் ஊத்துக்கோட்டை அருகே ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி ஏரி வரையான 25.275 கி.மீ. தூரத்தில், 13-வது கி.மீ முதல் பூண்டி ஏரி வரையான பகுதிகளில் ரூ.19.88 கோடி மதிப்பீட்டில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில், ஜீரோ பாயிண்ட் முதல், பூண்டி ஏரிவரையான கிருஷ்ணா கால்வாய் பகுதிகளில், 2-வது கட்டமாக 3,900-வது கி.மீ பகுதியான ஊத்துக்கோட்டை- அம்பேத்கர் நகர் முதல், 8.500-வது கி.மீ., பகுதியான கலவை வரை உள்ள, சேதமடைந்த கால்வாய் பகுதிகள் ரூ.24 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க சமீபத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விரைவில் ஒப்பந்தம் விடப்பட்டு, சேதமடைந்த கால்வாய்பகுதிகள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இப்பணி, 4.250 கி.மீதூரத்துக்கு, கால்வாயின் இருபுறமும் நடைபெறவுள்ளன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT