Published : 31 Oct 2015 02:03 PM
Last Updated : 31 Oct 2015 02:03 PM

குருவை தேடிவந்து மரியாதை செய்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர் தனது பள்ளிக் காலத்தில் தனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரை தேடி வந்து மரியாதை செலுத்தினார். அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநராக இருப்பவர் க.அறிவொளி. அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த இவர், அங்குள்ள அரசு பள்ளியில் பயின்றவர். அங்கு ஆங்கில ஆசிரியராக இருந்த நீதியப்பன் (73), கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூரை சேர்ந்தவர்.

அவரைத் தேடி நேற்று ராஜாவூர் வந்த கல்வித் திட்ட இயக்குநர் க.அறிவொளி, தனது ஆசிரியரை சந்தித்து மரியாதை செலுத்தினார். ஆசிரியரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இவரது வருவது குறித்து ஆசிரியர் நீதியப்பனுக்கு ஏதும் தெரியாது. தனது ஆசிரியரைச் தேடி வந்து, திட்ட இயக்குநர் ஆசி பெற்ற சம்பவம், ஆசிரியர் சமூகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து `தி இந்து’ நாளிதழிடம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் அறிவொளி கூறியதாவது:

`அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டிதான் என் சொந்த ஊர். பஞ்சாயத்து பள்ளியில் தொடக்கக் கல்வியை படித்தேன். தொடர்ந்து அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும்போது எங்களுக்கு நீதியப்பன் சார் ஆங்கிலம் எடுக்க வந்தார். முதல் நாள் எல்லோரையும் ஏ, பி, சி, டி.. சொல்லச் சொன்னார். எங்கள் வகுப்பில் ஒருவர்கூட சரியாகச் சொல்லவில்லை. உடனே அவர் சொன்ன வார்த்தை இன்னும்கூட நினைவு இருக்கிறது. `எல்லாரும் புக்கை தூக்கித் தூரப் போடுங்கல..’ என்றார். அந்த ஓராண்டும் அவர் எங்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தையே எடுக்கவில்லை. அடிப்படை ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார்.

அரசு பள்ளியிலேயேதான் அவரோட குழந்தைகளும் படித்தனர். இன்றைக்கு எத்தனையோ கருத்தர ங்கில் அடுக்கடுக்காக ஆங்கிலம் பேசுறேன். ஆனால் அதற்கு அடித்தளமிட்டது நீதியப்பன் சார்தான். அவர் குறித்தும், அப்போது அவர் பார்த்த ஆசிரியர் பணி குறித்தும், அடிக்கடி கூட்டங்களில் பேசுவேன்.

அவர் நாகர்கோவில் அருகே ராஜாவூர் கிராமத்தில் இருப்பது சமீபத்தில்தான் தெரியவந்தது. அதனால்தான் நேரில் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன். 38 ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்திப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. என் வகுப்பு தோழர்களைத் திரட்டி, மீண்டும் அவரை நேரில் சந்தித்து மரியாதை செய்ய உள்ளோம்’ என்றார் அவர்.

ஓய்வுபெற்று 15 ஆண்டுகளான ஆசிரியர் நீதியப்பனுக்கோ, இதுகுறித்து கேட்டாலே வார்த்தைகள் உடைந்து, சந்தோஷம் வெளிப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x