Published : 25 Nov 2020 07:40 PM
Last Updated : 25 Nov 2020 07:40 PM
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 மண்டலங்களிலும் மழையின் காரணமாக 52 இடங்களில் விழுந்த மரம் மற்றும் மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று இரவு கரையைக் கடக்கும் என அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தபட்டுத் தயார் நிலையில் உள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி நவ.24 காலை 8.30 மணி முதல் நவ.25 காலை 8.30 மணி வரை 15.4 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாநகராட்சிப் பகுதிகளில் 58 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி உள்ள அனைத்து இடங்களிலும் மாநகராட்சிப் பணியாளர்களால் மோட்டார் பம்புகள் கொண்டு நீர் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 10 இடங்களில் மழை நீர் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் 52 இடங்களில் மழையின் காரணமாக மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. அனைத்து மரக்கிளைகளும் மாநகராட்சிப் பணியாளர்களால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேக்கம் இன்றி உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள காப்பகங்களில் சாலையோரம் உள்ள வீடற்ற பொதுமக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் இதுவரை சாலையோரம் வசித்த வீடற்ற 216 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாநகராட்சிக் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT