Published : 25 Nov 2020 03:55 PM
Last Updated : 25 Nov 2020 03:55 PM
கன்னியாகுமரியில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 17-ம் தேதி படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.
பின்னர் ஆகஸ்டு மாதத்தில் இருந்து குமரிக்கு சுற்றுலா பயணிகள் வந்தாலும் படகு சேவை தொடங்கவில்லை. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா தொடர்பான பொழுதுபோக்கு, வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பாமலேயே இருந்தது.
இதனால் படகு சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் தொடர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நாகர்கோவில் வந்த தமிழக முதல்வர் பழனிசாமி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளுக்கான தடை ரத்து செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவதாகவும், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கும் எனவும் அறிவித்தார்.
ஆனால் முறையான அறிவிப்பு வரவில்லை என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் படகு சேவையை தொடங்கவில்லை. அதே நேரம் படகு போக்குவரத்து தொடங்குவதற்கான வெள்ளோட்டம், மற்றும் பிற ஏற்பாடுகள் நடைபெற்றன.
சமூக இடைவெளியுடன் சுற்றலா பயணிகளை அனுமதிப்பதற்கு வசதியாக கவுண்டர்களில் வெள்ளை நிறத்தில் இடைவெளி விட்டு வட்டங்கள் இடப்பட்டன.
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் பெரிதும் எதிர்பார்த்த விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து இன்று தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகிததார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் படகு சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா, உதவி மேலாளர் ஜெயகுமார், கடல்சார் வாரிய துறைமுக பாதுகாப்பாளர் தவமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய சொகுசு கப்பலான தாமிரபரணி விவேகானந்தர் மண்டபத்திற்கு பிரமுகர்களுடன் சென்று வந்தது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவையும் தொடங்கியது. 8 மாதத்திற்கு பின்னர் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள், சுற்றுலா ஆர்வலர்கள மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT