Published : 25 Nov 2020 03:40 PM
Last Updated : 25 Nov 2020 03:40 PM

விளம்பரப் பலகைகள், பதாகைகள் தட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (நவ. 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி நிவர் புயல் இன்று இரவு வலுவான புயலாக, கரையைக் கடக்கும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்கத் தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாடு முதல்வர் நிவர் புயலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவர் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது.

நிவர் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபார, வணிக நிறுவனங்கள் தங்கள் இடங்களில் அமைத்துள்ள விளம்பரப் பலகைகள், பதாகைகள் மற்றும் தட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி சேதாரங்களிலிருந்து தங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். தேவையின்றி வெளியில் வர வேண்டாம். தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண மையங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நிவாரண மையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பாக தேவையான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்ப்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-25384530, 044-25384540 மற்றும் தொலைபேசி எண் - 1913-லும், தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x