Published : 25 Nov 2020 03:30 PM
Last Updated : 25 Nov 2020 03:30 PM
பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமை விரைவில் அறிவிக்கும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று (நவ. 25) செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
"பாஜக சார்பில் நவ.6-ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கியது. கரூரில் நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. ஆனால், தஞ்சாவூரில் நேற்று நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளையில், வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திட்டமிட்டபடி டிச.5-ம் தேதியன்று திருச்செந்தூரில் நடைபெறும். அதற்கு முந்தைய நாளான டிச.4-ம் தேதி எஞ்சிய 3 அறுபடை வீடுகளில் சுவாமி வழிபாடு நடத்தப்படும்.
நிவர் புயல் பாதிப்பு தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல்வர்களை பிரதமர் மோடி தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளார். தமிழ்நாடு அரசு நிவர் புயல் பாதிப்பு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக எடுத்துள்ளது.
அரசுடன் இணைந்து நிவர் புயல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட பாஜகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
வேல் யாத்திரை தொடர்பாக என் மீது எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று இன்னும் கணக்குப் பார்க்கவில்லை.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ள நிலையில், கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்சியின் அகில இந்தியத் தலைமை விரைவில் அறிவிக்கும். அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை பாஜக கேட்டதாக வரும் தகவல் ஊகம்தான்.
நாடு முழுவதும் குடும்ப அரசியல்தான் உள்ளது. எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியாகத்தான் பேசினார்.
வேல் யாத்திரையின்போது காவல் துறையினர் எங்களிடம் எப்படி கடுமையாக நடந்து கொண்டனர் என்று எங்களுக்குத்தான் தெரியும். தமிழ்நாடு அரசும், காவல் துறையும் அவர்களது கடமையைச் செய்கின்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும். ஏனெனில், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாடு அரசும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
7 பேர் விடுதலை விவகாரத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவை தமிழ்நாடு ஆளுநர் அறிவிப்பார். பாஜக சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களிடம் கருத்துக் கேட்டு அதற்கேற்ப சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும்".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...