Published : 25 Nov 2020 01:22 PM
Last Updated : 25 Nov 2020 01:22 PM
'நிவர்' புயலால் கோவைக்குப் பாதிப்பில்லை என்றும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் தீவிரமடைந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 370 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 420 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள இப்புயல், இன்று (நவ. 25) நள்ளிரவில் அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்கிறது.
இதனால் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக் காற்றும், அதையொட்டிய சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நிவர் புயலால் கோவை மாவட்டத்திற்குப் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் எஸ்.பி. ராமநாதனிடம் கேட்டபோது, “நிவர் புயலால் கோவை மாவட்டத்திற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. ஆங்காங்கே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் வேகமும் மிதமாகவே இருக்கும். மணிக்கு 6-8 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
அதே நேரத்தில் திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவ. 25 மற்றும் 26-ம் தேதிகளில் 15 மி.மீ. முதல் 20 மி.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் கடலோர மாவட்டங்களைப் போல், பாதிப்பு எதுவும் இருக்காது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் படத்தேவையில்லை” என்றார்.
கோவை மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழைப் பொழிவு குறித்துக் கேட்டபோது, “இங்கு 320 மி.மீ. மழை செய்ய வேண்டும். கடந்த அக்டோபர் மாதம் 36 மி.மீ. மழையும், நவம்பர் மாதம் 82 மி.மீ. மழையும் பெய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 586 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. சுமார் 100 மி.மீ. வரை மழை பற்றாக்குறை உள்ளது.
அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை செய்துள்ளது. தென் மேற்குப் பருவமழைப் பொழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT