Published : 25 Nov 2020 12:33 PM
Last Updated : 25 Nov 2020 12:33 PM

நிவர் புயல் முன்னெச்சரிக்கை; விழுப்புரம் மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றம்: அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு

அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் மரக்காணம் பகுதியில் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

விழுப்புரம்

நிவர் புயலையொட்டி அதிக கனமழை, பலத்த காற்று வீசும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல், மழை, வெள்ளம் காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுள்ளனர்.

இந்நிலையில், மரக்காணம் பகுதியில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் 44 முகாம்களில் பாதுகாப்பான தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணம் அடுத்த மானூர் கிராமத்தில் மின் இணைப்பு இல்லாததால் பம்புசெட் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவும் மின் இணைப்பு பெற அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டு, இன்று (நவ. 25) மீனவ கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், மரக்காணம் பொம்மையார்பாளையம் உள்பட மீனவ கிராமங்களில் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

மீனவ கிராமங்களில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் அப்பகுதியில் வாழும் மீனவ மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

பொம்மையார் பாளையம் பகுதியில் இடிந்து விழுந்த குடியிருப்பு.

மேலும், பேரிடர் மேலாண்மை, தீயணைப்புத் துறை, காவல் கட்டுப்பாட்டு துறை மற்றும் மருத்துவத் துறை உள்பட அனைத்துத் துறைகளும் மீனவ கிராமத்தில் முகாமிட்டு உள்ளன.

கிழக்குக் கடற்கரை சாலையில் மரங்கள் ஏதேனும் விழுந்துள்ளதா என்று வனத்துறையும் மீட்புக் குழுவும் கண்காணித்து வருகின்றன.

மீனவ கிராமத்தில் இருக்கும் மீனவர்களுக்குத் தங்கும் முகாம்களில் உணவு அளிக்கப்படுகிறது.

புயலின் தாக்கம் இன்று மாலை அதிகமாக இருப்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. காலையில் மேகமூட்டமாக காணப்பட்ட வானிலை முற்பகலில் மழை பெய்துகொண்டிருக்கிறது, காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

மேலும், பொம்மையார்பாளையத்தில் உள்ள மீனவ கிராமங்களில் ஒரு சில வீடுகள் பலத்த காற்றினால் சேதம் அடைந்துள்ளது.

கிழக்குக் கடற்கரைச் சாலை போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 5 மணி வரை இயங்கும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை வரை மாவட்டத்தில் சராசரியாக 8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x